தேடுதல்

வெரோனாவில் திருத்தந்தை பிரான்சிஸ் வெரோனாவில் திருத்தந்தை பிரான்சிஸ்  

இத்தாலியின் வெரோனா நகரில் திருத்தந்தை

வெரோனா நகர் சிறைக்கைதிகளோடு இணைந்து மதிய உணவை அருந்தியதோடு, ஏறக்குறைய 2 மணி 45 நிமிடங்களை அவர்களோடு செலவிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, வட இத்தாலியின் வெரோனா நகருக்கு ஒரு நாள் திருப்பயணத்தை, இச்சனிக்கிழமை, மே மாதம் 18-ஆம் தேதி மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் என்ற இரு கதாபாத்திரங்களால், அதாவது, காதலர்களால் பிரபலமான வெரோனா நகருக்குத் திருத்தந்தை மேற்கொண்ட திருப்பயணத்தையொட்டி காலை உள்ளூர் நேரம் 6.00 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட திருத்தந்தை, உள்ளூர் நேரம் 8 மணிக்கு வெரொனாவின் பெந்தெகோதி விளையாட்டரங்கில் தரையிறங்கினார். அங்கு வெரோனா ஆயர் தொமெனிக்கோ பொம்பிலி, வெனெத்தோ மாநிலத் தலைவர் Luca Zaia, வெரோனா உயர்மட்ட அரசு அதிகாரி தெமித்ரியோ மர்த்தினோ, வெரோனா மேயர் தமியானோ தொம்மாசி ஆகியோர் திருத்தந்தையை வரவேற்றனர். சிறிய வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின், உடனேயே San Zeno பசிலிக்காப் பேராலயம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 8 மணிக்கு அந்நகரை வந்தடைந்த திருத்தந்தை, 8.30 மணிக்கே அப்பேராலயம் வந்து அருள்பணியாளர்கள், ஆண்,பெண் துறவறத்தாரைச் சந்தித்தார். அங்கு அவர் அவர்களுக்கு உரை ஒன்றும் வழங்கினார்.

உள்ளூர் நேரம் 9.15 மணிக்கு அப்பசிலிக்கா பேராலய வளாகத்தில் குழந்தைகளை சந்தித்து வாழ்த்துக்களை வழங்கினார். அரை மணி நேரம் இடம்பெற்ற இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து அமைதியின் அரங்கம் என அழைக்கப்படும் இடத்திற்குச் சென்று சந்திப்பு ஒன்றிற்குத் தலைமை தாங்கினார். அச்சந்திப்பிற்கு, நீதியும் அமைதியும் முத்தமிடும் என்பது தலைப்பாக எடுக்கப்பட்டிருந்தது. இங்குத் திருத்தந்தையுடன் ஆன சந்திப்பு, கேள்வி பதிலாக இடம்பெற்றது. உள்ளூர் நேரம் 10.15 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் நண்பகல் 1 மணி 45 நிமிடங்களுக்குத் துவங்கிய இந்தச் சந்திப்பை அரை மணி நேரத்தில் நிறைவுச் செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அங்கிருந்து காரில் Montorio-விலுள்ள சிறைச்சாலை வளாகத்திற்குச் சென்றார். அங்குச் சிறைச்சாலையின் உயர் அதிகாரிகளையும், சிறைக்கைதிகளையும், சுய விருப்பப்பணியாளர்களையும் சந்தித்து வாழ்த்தி ஊக்கத்தைத் தெரிவித்த திருத்தந்தை, உரை ஒன்றும் வழங்கினார்.

தன் உரைக்குப்பின் சிறைக்கைதிகளோடு இணைந்து மதிய உணவையும் அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். ஏறக்குறைய 2 மணி 45 நிமிடங்களை அச்சிறைச்சாலையில் செலவிட்ட திருத்தந்தை, உள்ளூர் நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பெந்தெகோதி விளையாட்டரங்கம் சென்றார்.

உள்ளூர் நேரம் 3 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு பெந்தகோதி திறந்த அரங்கில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியின் இறுதியில் வெரோனா ஆயர் பொம்பிலி நன்றியுரை வழங்க, வெரோனா நகருக்கான திருத்தந்தையின் திருப்பயணம் இனிதே நிறைவேறியது. உள்ளூர் நேரம் 4 மணி 45 நிமிடங்களுக்கு ஹெலிகாப்டரில் ஏறி வத்திக்கான் நகர் நோக்கி பயணமானார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 May 2024, 17:23