தேடுதல்

AEXPI முன்னாள் மாணவர் சங்க மாநாட்டின் பங்கேற்பாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை AEXPI முன்னாள் மாணவர் சங்க மாநாட்டின் பங்கேற்பாளர்களைச் சந்திக்கும் திருத்தந்தை   (Vatican Media)

அழகு என்பது மனிதரின் உள்ளுணர்வுடன் இணைக்கப்பட்ட ஒன்று!

‘மானிட மைந்தருள் பேரழகுப் பெருமகன் நீர்’ என்று இயேசுவைக் குறித்துக் கூறப்பட்டாலும், அவர் நமக்காகத் துன்பங்களை ஏற்றத்தின் வழியாக, அவரது அழகுடல் நொறுக்கப்பட்டு சிதைந்துபோனது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உங்களின் ஒத்துழைப்புத் திட்டங்கள்  வழியாக, நோய்வாய்ப்பட்ட பல குழந்தைகளின் முகங்களில் மகிழ்வைக் கொண்டுவர முயற்சிக்கிறீர்கள், அவர்களுக்கு உதவுவதன் வழியாக, அதை அவர்களின் குடும்பங்களுக்கும், ஒரு வகையில், ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் கொண்டு வருகிறீர்கள் என்று கூறினார் திருத்தந்தை

மே 23, இவ்வியாழன்று, பேராசிரியர் Ivo Pitanguy (AEXPI) முன்னாள் மாணவர் சங்கத்தின் அறுவை சிகிச்சை குறித்த மாநாட்டின் பங்கேற்பாளர்கள் 300 பேரை திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

ஆண்களாகவும், மருத்துவர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், நம் முகங்கள் உடலின் கண்களால் உணரக்கூடியதைத் தாண்டிய அழகைப் பிரதிபலிக்கும் என்பதை நாம் அறிவோம் என்று கூறிய திருத்தந்தை, அழகு என்பது நாகரீக வணிகம் மற்றும் தோற்றத்தின் கலாச்சாரத்தால் திட்டமிடப்பட்ட போக்குகளுக்கு உட்பட்டது அல்ல, ஆனால் அது மனிதரின் உண்மையுடன், அவரது உள்ளுணர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும், அதை நாம் சிதைக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

"இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம். இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே" (காண்க. 2 கொரி 3:18) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இந்த ஆழமான உண்மை எப்போதும் நம் கரங்களை வழிநடத்தட்டும் என்றும், நம் இருப்பில், நல்ல செயல்களில், கொடுக்கப்பட்ட மற்றும் பரப்பப்படும் அன்பில் பதிந்திருக்கும் கடவுளின் உருவத்தை உலகிற்குக் கொண்டு வரட்டும் என்றுக் கூறினார்.

 "மானிட மைந்தருள் பேரழகுப் பெருமகன் நீர்" (காண்க திபா 45:3) என்று இயேசுவைக் குறித்துக் கூறும் திருப்பாடலின் வார்த்தைகள் மிகவும் சுவாரசிமானதாக இருக்கிறது என்று கூறிய திருத்தந்தை, அதேவேளை, 'அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை' (காண்க. எசா 52:14) என்ற எசாயாவின் வார்த்தைகள், பிறர் துயரங்களை ஏற்கும்பொருட்டு அவரது அழகு எவ்வாறு மாற்றம் பெற்றது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை

இந்த முரண்பாட்டில் இயேசு தம்முடைய மற்றும் நம்முடைய உண்மையான உருவத்தைக் காட்டுகின்றார், அதாவது, சிலுவையின் பாதையில் கடந்து செல்லும் நம்முடைய  சிறுமையை ஏற்றுக்கொள்வதன் வழியாக, என்றுமுள்ள விண்ணக மாட்சியை அடைவதற்காக, ஏமாற்றம் தராத மற்றும் உதிர்ந்துபோகாத எதிர்நோக்கை நமக்குக் காட்டுகிறார் (காண்க.1 கொரி. 9:25) என்றும் விளக்கினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2024, 14:50