உரையாடலுக்குத் திறந்த மனப்பான்மை வேண்டும் : திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தீர்க்கமான மற்றும் சகாப்தமான கலாச்சார சவால்களை நாம் எதிர்கொண்டு வருவதால், நமது சாதனைகளைப் பற்றி நாம் ஒருபோதும் மனநிறைவுடன் இருக்கக்கூடாது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தொல்லெழுத்துக் கலை, தூதரக உறவுகள் மற்றும் ஆவணக் காப்பகங்கள், மற்றும் நூலக அறிவியல் சார்ந்த வத்திக்கான் துறைகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை மே 13, திங்களன்று, திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
உலகமயமாக்கலுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சனைகள், மங்கிய அறிவு மற்றும் மதிப்புக் குறைவின் ஆபத்து, தொழில்நுட்பங்களுடனான பெருகிய முறையில் சிக்கலான உறவு, ஒன்றுக்கொன்றான திணிப்புகள் இல்லாமல் வளர்க்கப்பட வேண்டிய மற்றும் முன்மொழியப்பட வேண்டிய கலாச்சார மரபுகள் பற்றியும் தனது உரையில் பிரதிபலித்துள்ளார் திருத்தந்தை.
இந்தச் சூழலில், உங்களுக்குத் தேவைப்படும் முதல் திறன், மோதலுக்கும் உரையாடலுக்கும் மிகுந்தளவில் திறந்த மனப்பான்மை, வரவேற்கத் தயாராக இருப்பது, குறிப்பாக, விளிம்புநிலைகள் மற்றும் பொருள், கலாச்சார மற்றும் ஆன்மிக வறுமைகளில் கவனம் செலுத்துவது எனவும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
நீங்கள் படிப்புடன் மட்டுமல்லாமல், நூலகம் மற்றும் ஆவணக் காப்பகங்களில் இந்தப் பணியை மேற்கொள்பவர்களின் வாழ்க்கை அனுபவத்துடன் தொடர்பு கொண்டு ஆவணக் காப்பாளர்கள் மற்றும் நூலகர்களாக இருக்க கற்றுக்கொள்கிறீர்கள் என்று உரைத்துள்ள திருத்தந்தை, ஆவணக் காப்பகங்கள் மற்றும் நூலகத்தின் பணி மற்றும் நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியத்திலிருந்து நேரடியாகப் பெறுவதன் வழியாக உங்களைப் பயிற்றுவிக்கும் மேலான வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்