தனிவரம் எப்போதும் காப்பாற்றப்பட வேண்டும்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் உங்கள் பிறரன்பு அமைப்பின் தனிவரத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தை ஒருபோதும் இழக்காதீர்கள், உங்கள் அமைப்பின் நிறுவுனர் வழியாக இறைவன் கொடுத்த இந்தத் தனிவரத்தை எப்போதும் காத்துக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியப் பெண்மணி Chiara Amirante, 1994-ஆம் ஆண்டு உருவாக்கிய 'புதிய தொடுவானங்கள்' (New Horizons) என்ற பிறரன்பு அமைப்பு தனது 30-ஆம் ஆண்டை சிறப்பிக்கும் வேளை, மே 17, இவ்வெள்ளியன்று, அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள காணொளிக் காட்சியொன்றில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.
உங்கள் அமைப்பின் தனிவரம் இரண்டு அடிப்படை விடயங்களுடன் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்த திருத்தந்தை, அவைகள் இறைவேண்டல் மற்றும் துணிவு என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.
முதலாவதாக, இறைவேண்டல் என்றும், இது இல்லாமல் உங்களால் முன்னேறிச்செல்ல முடியாது என்றும் அறிவுறுத்திய திருத்தந்தை, இரண்டாவதாக, துணிவை எப்போதும் இழந்துவிடாதீர்கள், காரணம் அதுதான் உங்களின் தனிவரத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியாக இருக்கும் என்றும் உரைத்துள்ளார்.
ஒரு தனிவரம் அதன் வரலாற்றில் எப்போதும் வளர்ச்சியடையும்போது, திருஅவையிலும் கூட தவறான புரிதல்களின் தருணங்கள், இருண்ட தருணங்கள் இருந்திருக்கின்றன என்று கூறிய திருத்தந்தை, இயேசு சபை தடைசெய்யப்பட்டு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டதை நினைவில் கொண்டே தான் இவ்வாறு கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் கடினமான தருணங்கள் உள்ளன, எல்லா தனிவரங்களும் இறைவனின் சிலுவையைக் கடந்து செல்ல வேண்டும், இது மெதுவாகவோ அல்லது விரைவாகவோ நிகழலாம் என்று விளக்கியுள்ள திருத்தந்தை, ஒருவர் மனவலிமையுடன் சிலுவையைத் தூக்கிச் செல்லவில்லை என்றால், நற்செய்தி அறிவிப்பில்லா தீர்வுகளைத் தேடும் ஆபத்து ஏற்படுமாதலால், தனிவரத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.
தனிவரத்தின் மீதான நம்பகத்தன்மை என்பது மிக முக்கியமான விடயங்களில் ஒன்றாகும், எனவே அதைப் பாதுகாக்கவும், மேலும் சில கட்டளைகளுடன் அதை வளரச் செய்யுமாறு திருஅவை கேட்கும்போதும், அதில் கவனம் செலுத்துங்கள், ஆனால் எப்போதும் திருஅவைக்கு விசுவாசமாக இருங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
உங்கள் தனிவரத்தின் சிறப்பான அம்சம் என்னெவென்றால், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், சமூகத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்டவர்களிடம் நீங்கள் பழகுவதும் உரையாடுவதும்தான், ஆனாலும் அவர்களின் சுதந்திரத்தைப் பறிக்காமல் நீங்கள் அவர்களை உங்களுடன் அழைத்துச் செல்கிறீர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
நீங்கள் தெருக்களுக்குச் சென்று, வாழ்க்கையின் பொய்த்தோற்றத்தில் தொலைந்து போகும் இளைஞர்களை அழைத்துச் சென்று, அவர்கள் வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதைக் கண்டு நான் பெரிதும் மகிழ்கின்றேன் என்று கூறிய திருத்தந்தை, உங்களின் நிறுவுனர் கிளாரா, குழந்தைகளிடம் கொண்டிருந்த அதே மனநிலையுடன் நீங்களும் அவர்களிடத்தில் அன்புகூர்கிறீர்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்