தேடுதல்

பெரும் நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் திருத்தந்தை பெரும் நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் திருத்தந்தை  (Vatican Media)

இயற்கையை பாதுகாக்க நல்மனங்களின் அக்கறை தேவை

திருத்தந்தை : சுற்றுச்சூழல் மீதான அக்கறை, ஏழைகள் மீதான அக்கறை, மற்றும் இளையோர் மீதான அக்கறையுடன் பெரும் நிறுவனங்கள் செயலாற்ற வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

முக்கிய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் உயர் அதிகாரிகளை ஜூன் 15, சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்த உயர் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, சமூக வாழ்விலும், அரசியல் வாழ்விலும் முக்கியத்துவம் பெறுபவைகளாக இருக்கின்றன என எடுத்துரைத்தார்.

பெரும் நிறுவனங்கள் அனைத்துலக அளவில் உறவுகளுக்கு தனிச்சிறப்புப் பங்காற்றுகின்றன என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மீது தங்கள் பாதிப்பைக் கொண்டுள்ளார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இன்றைய சூழலில் மூன்று சவால்கள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும் என்ற திருத்தந்தை, அச்சவால்களாக சுற்றுச்சூழல் மீதான அக்கறை, ஏழைகள் மீதான அக்கறை, இளையோர் மீதான அக்கறை என்பவைகளை எடுத்துரைத்தார்.

இயற்கையை பாதுகாக்க நாடுகளின் சட்டங்கள் மட்டும் போதாது, நல்மனம் கொண்ட மக்களின் அக்கறையும் செயல்பாடுகளும் தேவைப்படுகின்றன என்ற திருத்தந்தை, நம் பொது இல்லமாகிய இவ்வுலகை பாதுகாப்பதற்கு நம் ஒவ்வொருவரின் அர்ப்பணமும் தேவை என்பதை வலியுறுத்தினார்.

ஏழைகள் ஒரு நாளும் நிராகரிக்கப்படக்கூடாது என்பதை தன் இரண்டாவது கருத்தாக எடுத்துரைத்த திருத்தந்தை, பொருட்களை மறுசுழற்சி செய்யவும் தேவையற்றவைகளை நிராகரிக்கவும் தெரிந்துள்ள நாம், மக்களை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ளவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இன்றைய இளையோர் வருங்காலத்திற்கான வாய்ப்புக்கள் இன்றி திணறி வருவதால், அவர்களை இன்முகத்துடன் வரவேற்று அவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி, வருங்காலம் குறித்த நம்பிக்கையை வழங்கவேண்டியது பெரிய நிறுவனங்களின் கடமையாகிறது என்பதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 June 2024, 14:57