வேர்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை, எதிர்காலம் இல்லை!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
வேர்கள் என்பது அடிப்படை என்றும், வேர்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை, எதிர்காலம் இல்லை. இலைகளின் செழிப்பு வேர்களின் நலத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித பேதுருவின் வட்டம் (The Circle of St Peter) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களை, ஜூன் 24, இத்திங்களன்று, திருப்பீடத்தின் கிளமெந்தீனா அறையில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, உங்கள் அமைப்பின் வரலாற்றை அருங்காட்சியகப்படுத்தாமலும், உங்கள் வேர்களை (மூலத்தை) மலட்டுத்தன்மை ஆக்காமலும் பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
வாழும் நம்பிக்கை, உறுதியான தொண்டு, ஏழைகள் மீதான அன்பு ஆகியவற்றின் செல்வம் ஒரு முதியவரின் முன்மாதிரியின் வழியாக எவ்வளவு செல்வது என்பதையும், ஓர் இளைஞன் எவ்வளவு ஆற்றல், எவ்வளவு படைப்பாற்றல், எவ்வளவு உத்வேகத்தை கொடுக்க முடியும் என்பதையும் சிந்தியுங்கள் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
தூரின் நகர் அருளாளர் Pier Giorgio Frassati அவர்களின் எளிமையான வாழ்வை அவர்களுக்கு நினைவூட்டிய திருத்தந்தை, அவர் ஒரு செல்வச்செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஏழ்மை நிலைக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் என்றும், தூய ஆவியார் அருளிய ஊட்டம் அவரிடம் இருந்ததால் இயேசுவின் மீதும் தனது சகோதரர்கள்மீதும் அவரால் அன்புகொள்ள் முடிந்தது என்றும் விளக்கினார்.
வரும் 2025-ஆம் ஆண்டு யூபிலி ஆண்டாக இருப்பதால், உரோமைக்கு வரும் திருப்பயணிகளும் சுற்றுலாப்பயணிகளும், ஒன்றிப்பின், உடனிருப்பின், நெருக்கத்தின், பகிர்தலின் உண்மையான வெளிப்பாடுகளை எடுத்துக்காட்டும் கிறிஸ்தவப் பிறரன்புப் பணிகளின் நறுமணக்காற்றை சுவாசிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
புனித பேதுருவின் வட்டம் (The Circle of St Peter) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், கடந்த 155 ஆண்டுகளாக, இறைவனுக்காகவும், திருஅவைக்காகவும் பணிகள் ஆற்றி வருகின்றனர். மேலும் உரோம் மறைமாவட்டத்தில், வறுமையில் வாடும் சகோதரர், சகோதரிகளுக்கு உதவி செய்வதை தங்கள் சிறப்பான அழைப்பாகக் கொண்டிருக்கும் புனித பேதுரு வட்டத்தின் உறுப்பினர்கள், மதம், இனம் என்ற பாகுபாடுகளைக் கடந்து, துன்புறும் அனைவருக்கும் உதவிகள் செய்து வருகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்