தேடுதல்

புலம்பெயர்ந்தோரை சந்திக்கும் திருத்தந்தை (கோப்புப் படம்) புலம்பெயர்ந்தோரை சந்திக்கும் திருத்தந்தை (கோப்புப் படம்) 

புலம்பெயர்ந்தோருடன் ஒன்றிணைந்து பயணிப்போம்! திருத்தந்தை பிரான்சிஸ்

பாலைநிலத்தில் பசி, தாகம், நோய் மற்றும் விரக்தியால் சோதனைகளையும் தடைகளையும் எதிர்கொண்டதுபோலவே, இன்றைய நம் புலம்பெயர்ந்த சகோதரர் சகோதரிகளும் எதிர்க்கொண்டு வருகின்றனர் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பல புலம்பெயர்ந்தோர் கடவுளைத் தங்கள் பயணத் துணையாகவும், வழிகாட்டியாகவும், மீட்பின் நங்கூரமாகவும் உணர்கிறார்கள் என்றும்,  அவரை நம்பி தங்கள் பயணத்தைக் தொடங்குகிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 29, ஆம் தேதி, ஞாயிறன்று, சிறப்பிக்கப்படவிருக்கும் 110-வது உலக இடம்பெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் நாளுக்காக ஜூன் 3, இத்திங்களன்று வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

தொடக்கமாக, கடந்த அக்டோபர் மாதம் நிகழ்ந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் கலந்துரையாடலை சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, ஒன்றினைந்த பயணம் என்பது இறைமக்களின் கூட்டுப் பயணமாகவும், இறையாட்சியின் வருகையின் பணியில் தனிவரம் மற்றும் பணிகளுக்கு இடையிலான பயனுள்ள உரையாடலாகவும் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லும் பயணத்தை சித்தரிக்கும் விடுதலைப் பயணம், இயல்பாகவே நினைவுக்கு வருகிறது என்று கூறியுள்ள திருத்தந்தை, அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரத்திற்கான அம்மக்களின் இந்த நீண்ட பயணம், இறைவனுடனான அவரது இறுதி சந்திப்பை நோக்கிய திருஅவையின் பயணத்தை முன்னறிவிக்கிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

அவர்களின் இந்தப் பயணங்கள், "நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம் (காண்க. பிலி 3:20) என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளை நமக்கு நினைவூட்டுகின்றன என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

மோசேயின் காலத்து இஸ்ரயேல் மக்களைப் போலவே, புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் அடக்குமுறை, முறைகேடு, பாதுகாப்பின்மை, பாகுபாடு மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளின் பற்றாக்குறையிலிருந்து புலம்பெயர்ந்து செல்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை

பாலைநிலத்தில் பசி, தாகம், நோய் மற்றும் விரக்தியால் சோதனைகளையும் தடைகளையும் எதிர்கொண்டதுபோலவே, இன்றைய நம் புலம்பெயர்ந்த சகோதரர் சகோதரிகளும் எதிர்க்கொண்டு வருகின்றனர் என்று ஒப்பிட்டுக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

புலம்பெயர்ந்தோர் பலர், கடவுளைத் தங்கள் பயணத் துணையாகவும், வழிகாட்டியாகவும், மீட்பின் நங்கூரமாகவும் உணர்கிறார்கள் என்றும்,  அவரை நம்பி தங்கள் பயணத்தைக் தொடங்குகிறார்கள் என்றும் கூறியுள்ள திருத்தந்தை, அவரில், அவர்கள் மனச்சோர்வின் தருணங்களில் ஆறுதல் காண்கிறார்கள். என்றும், இருப்பினும் அவர்களின் பயணத்தில் பல நல்ல சமாரியர்கள் அவர்களுக்கு உதவி வருகிறார்கள் என்றும் உரைத்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் தங்களின் எதிர்நோக்கில் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்றும், பாலைநிலங்கள், ஆறுகள், கடல்கள் என அவர்கள் கடந்து செல்லும் அத்தனை பயணங்களிலும் அவர்கள் தங்களுடன் திருவிவிலியத்தையும், இறைவேண்டல் நூல்களையும், செபமாலைகளையும் நம்பிக்கையுடன் சுமந்து செல்கிறார்கள் என்றும் உரைத்துள்ளார் திருத்தந்தை.

கடவுள் தனது மக்களுடன் மட்டுமல்ல, அவர்களுக்குள்ளும் நடந்துசெல்கிறார், அவர் வரலாற்றில் பயணம் செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களுடன், குறிப்பாக, சிறியவர்கள், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுடன் தன்னை அடையாளப்படுத்துகிறார் என்றும் கூறியுள்ள திருத்தந்தை,  இத்தகைய கடவுளின் செயலில் அவரது மனுவுருவெடுத்தலின் மறைபொருளைக் காண்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2024, 15:56