வருங்காலத்திற்கு எத்தகைய உலகை விட்டுச் செல்லப் போகிறோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
எத்தியோப்பியா, ஜாம்பியா, தன்சானியா, புருண்டி கத்தார், மௌரித்தானியா ஆகிய நாடுகளின் வத்திக்கானிற்கான புதிய தூதுவர்களை ஜூன் 8ஆம் தேதியன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பம், நம்பிக்கை, அமைதி என்ற மூன்று தலைப்புக்களில் உரையாற்றினார்.
ஒவ்வொரு நாடும் தனக்கென தனிப்பட்ட வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் தனித்தன்மைகளைக் கொண்டிருந்தாலும், அவை மனிதக் குடும்பத்தின் அங்கமாகவே உள்ளன என்ற திருத்தந்தை, குடும்பத்திலேயே நாம் அன்பு, சகோதரத்துவ உணர்வு, ஒன்றிணைந்து செயல்படுதல், பகிர்தல், அக்கறை காட்டுதல் ஆகியவைகளைப் பார்க்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய உலகில் நாடுகளிடையேயான இணக்க நிலை முறிவுபட்டு, மோதல்களால் சூடான், உக்ரைன், காசா, ஹெயிட்டி போன்ற பல நாடுகள் துயர்களை அனுபவித்து வருவதையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
இத்தகைய மோதல்களால் புலம்பெயர்தல் பெருமளவில் இடம்பெயர்வதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, மக்கள் வணிபப் பொருட்களாக கடத்தப்படல், காலநிலை மாற்றங்கள், பொருளாதார சரிநிகரற்ற நிலைகள் போன்றவைகளையும் முன்வைத்தார்.
பல நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் பெரிய அளவில் குறைந்து வருவது குறித்தும் கவலையை வெளியிட்டு வருங்காலத் தலைமுறைக்கு நாம் எத்தகைய ஓர் உலகை விட்டுச் செல்லப் போகிறோம் என்று ஆழமாகச் சிந்திக்கவேண்டிய தேவை உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இன்றைய உலகம் எதிர்நோக்கிவரும் பிரச்னைகள் வருங்காலம் குறித்த அவநம்பிக்கையைத் தராமல் இருக்க வேண்டுமானால், நம்பிக்கை என்பது நம் வாழ்வின் மையச் செய்தியாக வேண்டும் எனவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மீறமுடியாத மனித மாண்புடன் ஒவ்வொருவரையும் நாம் அரவணைத்து உறவைப் புதுப்பிக்கும்போது அமைதி மலர்கின்றது எனவும் எடுத்துரைத்தார்.
பாராமுகங்களையும் அச்சத்தையும் கைவிட்டு ஒருவருக்கொருவர் மதிப்புடன் அனைவரும் நடத்தப்படும்போது, நாம் வளர்ச்சியைக் காணலாம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருங்காலத்தலைமுறையின் வளர்ச்சிகளைப் பாதிக்கும் அநீதிகள், பாகுபாடுகள், ஏழ்மை, சரிநிகரற்ற நிலைகள் போன்றவற்றை களையவும் அமைதியைக் கட்டியெழுப்பவும் அனைவரும், அனைத்து அரசுகளும் முனையவேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்