தேடுதல்

நற்கருணை, நம்மை புதிய உலகின் இறைவாக்கினர்களாக மாற்றுகிறது!

நம்மை இறைவாக்கினர்களாகவும், புதியதொரு உலகத்தை படைப்பவர்களாகவும் மாற்றும் நற்கருணைக்கு நன்றி கூறுவோம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிடப்பட்ட அப்பத்திலும், சீடர்களுக்குப் பருக கொடுக்கப்பட்ட கிண்ணத்திலும், மனிதகுலம் அனைத்திற்காகவும், இவ்வுலகின் நல்வாழ்விற்காகவும் தன்னையே வழங்குகிறார் இயேசு என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 2, இஞ்ஞாயிறன்று, அன்னையாம் திருஅவையில், இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா சிறப்பிக்கப்படும் வேளை, வத்திக்கானின், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை  செப உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

மிதமான மழைத்துளிகளின் நடுவே கரங்களில் குடைகளை ஏந்தி ஆர்வமுடன் காத்திருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்குத் தனது இனிய புன்னகையை பரிசாக வழங்கி தனது மூவேளை செப உரையைத் தொடங்கிய திருத்தந்தை, இன்றைய ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் (மாற் 14:12-26) 'அதை அவர்களுக்குக் கொடுத்தார்' (வச. 22) என்ற இறைவார்த்தையை மையக்கருத்தாகக் கொண்டு தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.  

நற்கருணை பகிர்வின் அடையாளம்

நற்கருணை, உண்மையில், அருள்கொடையின் பரிமாணத்தை முதலில் நமக்கு நினைவுபடுத்துகிறது என்றும், இயேசு அப்பத்தை கையில் எடுத்தது அவர் மட்டும் உண்பதற்காக அல்ல, மாறாக, அதைப் பிட்டு எல்லாருக்கும் பகிர்ந்துகொடுப்பதற்கே என்றும் கூறிய திருத்தந்தை, இதன்வழியாக அவருடைய அடையாளத்தையும் திருப்பணியையும் நமக்கு வெளிப்படுத்துகிறார் என்றும் எடுத்துக்காட்டினார்.

இயேசு, தனது உயிரை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளாமல் அதை நமக்கும் வழங்கினார், கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் நாம் அனைவரும் நிலைவாழ்வைப் பெறும்பொருட்டு அவர் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார் (காண்க. பிலி 2:1-11) என்றும் அவர்களுக்கு விளக்கினார் திருத்தந்தை.

நாம் நற்கருணையாக மாறவேண்டும்

அப்படியானால், நற்கருணையைக் கொண்டாடுவதும், இந்த அப்பத்தை உண்பதும், வாழ்க்கையிலிருந்து விலகிய வழிபாட்டுச் செயலோ அல்லது தனிப்பட்ட ஆறுதலுக்கான ஒரு தருணமோ அல்ல என்பதை நாம் புரிந்துகொள்கிறோம் என்றும் தெளிவுபடுத்தினார் திருத்தந்தை.

இயேசு அப்பத்தை எடுத்து, அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை, அவருடன் ஒன்றித்திருப்பது என்பது, மற்றவர்களுக்காக நாம் பிடப்பட்ட அப்பமாக மாறவும், நம்மிடம் என்ன இருக்கிறதோ மற்றும் நாம் என்னவாக இருக்கிறோமோ அதை மற்றவர்களுடன் பார்கிந்துகொள்ளவும் நமக்கு உதவுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

கிறிஸ்துவின் திரு உடலிலும் திரு இரத்தத்திலும் பங்குபெறுவது என்பது, நாம் எதை உண்கிறோமோ அதுவாகவே நம்மை மாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை என்று புனித பெரிய லியோ கூறியதை நினைவுபடுத்திய திருத்தந்தை, இயேசுவின் திருவுடலை உண்ணும் நாமும் திருநற்கருணையாக மாறுவதற்கு அழைக்கப்படுகிறோம் என்றும்,  அந்நிலையில், இனி நமக்கென்றே வாழாமல், கிறிஸ்துவின் வழியில் நமது வாழ்வை பிறருக்கு ஒரு கொடையாக வழங்குகின்றோம் (காண்க. உரோ 14:7) என்றும் விளக்கினார்.

எப்போது வாழ்வின் அப்பம் பிடப்படுகிறது?

நாம் சுயநலத்தைக் கடந்து அன்பை நோக்கி திறந்த மனம் கொள்ளும்போது, ​​உடன்பிறந்த உறவுக்கான பிணைப்பை வளர்க்கும்போது, நம் சகோதரர் சகோதரிகளின் துன்ப துயரங்களில் பங்குகொள்ளும்போது, நம் உணவையும் வளங்களையும் தேவையில் இருப்போருடன் பகிர்ந்துகொள்ளும்போது, நம் திறமைகளை மற்றவர்களின் நலன்களுக்காக அர்ப்பணிக்கும்போது, ​​நாம் இயேசுவைப் போல நம் வாழ்வின் அப்பத்தை பிடுகிறோம் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

கேள்வி எழுப்புவோம்

எனது உயிர் எனக்கானது மட்டும் என்று நினைக்கின்றேனா அல்லது, இயேசுவைப் போன்று அதைப் பிறருக்கும் கொடுக்க விரும்புகின்றேனா? எனது வாழ்வை மற்றவர்களுக்காக செலவழிகின்றேனா அல்லது, என் சுயநலக் கூட்டுக்குள் என்னை நான் அடைத்துக் கொள்கின்றேனா? எனது அன்றாடச் சூழலில் என் வாழ்வை எப்படி பிறரோடு பகிர்ந்துகொள்வது என்பதை நான் அறிந்திருக்கின்றேனா அல்லது, நான் எப்போதும் எனது சொந்த நலனையே தேடுகின்றேனா என்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திக்குமாறு திருப்பயணிகளிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

அன்னை மரியாவின் துணை நாடுவோம்

வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவாகிய இயேசுவை வரவேற்று, அவருக்காகத் தன் வாழ்வு முழுவதையும் கையளித்த நம் அன்னை கன்னி மரியா, நற்கருணையில் இயேசுவுடன் ஒன்றிக்கப்பட்ட அன்பின் கொடையாக நாம் மாற நம் அனைவருக்கும் உதவுவாராக! என்று கூறி தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2024, 13:22