நமது இறைநம்பிக்கையை வலுப்படுத்தவே இயேசு சோதனைகளைத் தருகிறார்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காற்றையும் கடலையும் அடக்குதல் நிகழ்வு, இயேசுவின் சீடர்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்தவும், அவர்களை மேலும் மனவுறுதி கொள்ளச் செய்யவும் உதவியது என்றும், இந்த அனுபவம் அவர்களின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் வரும் தடைகளையும் சிரமங்களையும் எதிர்கொள்ள துணிவையும் தயார்நிலையையும் அவர்களுக்கு அளித்தது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமையில் கோடையின் வெப்பம் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள போதிலும் ஜூன்23, ஞாயிறு இன்று, மேகமூட்டங்கள் சூழ்ந்த சற்று இதமான சூழலில், திருத்தந்தையின் அருளுரையைக் கேட்கும் பேராவலுடன், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
இயேசுவின் உடனிருப்பும் ஊக்கமும்
இன்றைய ஞாயிறு நற்செய்தி வாசகத்தை (மாற் 4:35-41) மையமாகக் கொண்டு தனது மூவேளை செபவுரை சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிகழ்வில் இயேசு தனது சீடர்களை சோதிக்க விரும்பினாலும், அவர் அவர்களைத் தனியாக விட்டுவிடவில்லை, அவர்களுடன் உடனிருந்து அவர்களைக் காப்பாற்றுகின்றார் என்பதையும் எடுத்துக்காட்டினார்.
மேலும் புயல் காற்று அவர்களைத் தாக்குக்கும் வேளை, இயேசு தனது உடனிருப்பால் அவர்களுக்கு உறுதியளிக்கிறார், அவர் அவர்களை ஊக்கப்படுத்துகிறார், மேலும் நம்பிக்கை குன்றாதிருக்க அவர்களைத் தூண்டுகிறார், அந்த ஆபத்து நிறைந்த சூழலிலும் அவர் அவர்களுடன் இணைந்திருக்கிறார் என்றும் விளக்கினார் திருத்தந்தை.
சோதனைகள் நம்பிக்கையை வலுப்படுத்தவே
இயேசு தனது சீடர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும், அவர்களை மேலும் மனவுறுதி கொள்ளச் செய்யவுமே இத்தகையதொரு சோதனைக்கு அவர்களை உட்படுத்துகிறார் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, உண்மையில், சீடர்கள் இந்த அனுபவத்தின் வழியாக, இயேசுவின் வல்லமை மற்றும் அவர்கள் மத்தியில் அவருடைய இருத்தலைப் (presence) பற்றி நன்கு அறிந்துகொள்கின்றனர், மேலும் இந்த அனுபவம் அவர்களின் நற்செய்தி அறிவிப்புப் பணியில் வரும் பயம் உட்பட இன்னும் பிற தடைகள் மற்றும் சிரமங்களை எதிர்கொள்ள துணிவுடனும் தயார்நிலையுடனும் இருக்க அவர்களுக்கு உதவுகிறது என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளையில், இயேசுவுடன் இணைந்து இந்தச் சோதனையைச் சமாளிப்பதன் வழியாக, எல்லா மக்களுக்கும் நற்செய்தியைக் கொண்டு செல்வதற்கு, சிலுவை மற்றும் உயிர்த்தியாகத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் அவர்கள் அறிந்துகொள்கிறார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
மேலும் இயேசு நம்மைத் தம்முடன் அழைத்துச் செல்கின்றார், அவருடைய வார்த்தையை நமக்கு வழங்குகின்றார், தனது திருஉடலையும் திருஇரத்தத்தையும் நமக்கு உணவாக அளிக்கின்றார், பின்னர் அவர் நம்மை அவருடன் பயணிக்க அழைக்கிறார் என்றும் கூறிய திருத்தந்தை, நாம் அவரிடம் கேட்டறிந்த அனைத்தையும் அறிவிக்கவும், நமது அன்றாட வாழ்வில், அது கடினமானதாக இருந்தாலும் கூட, நாம் பெற்றதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் திருநற்கருணையில் இயேசு நமக்கும் எடுத்துக்காட்டுகிறார் என்றும் விவரித்தார்.
இணைந்த நிலையில் இறையாட்சியை அறிவிப்போம்
நாம் எதிர்நிலைகளைச் சந்திக்கும் தருணங்களில், அவர் நம்மை கைநெகிழாமல், அவற்றை நாம் எதிர்கொள்ள அவர் நமக்கு உதவுகிறார். ஆகவே, நாமும், அவருடைய உதவியால் அவற்றைக் கடந்து, மேலும் மேலும் அவரைப் பற்றிக்கொள்ளவும், நமது ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அவருடைய வல்லமையில் நம்பிக்கை வைக்கவும், நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் தயக்கங்கள், முடிவுகள் மற்றும் முன்னுறு தப்பெண்ணங்களைக் (preconceptions) கடந்து, மனவுறுதியுடனும், பெருந்தன்மை நிறைந்த இதயத்துடனும், இறையாட்சி இருகிறது, அது நம்மிடையே இருக்கிறது என்பதையும், இயேசு நம்முடன் இருப்பதால் எல்லாத் தடைகளையும் தாண்டி அதை நாம் ஒன்றாக வளரச் செய்ய முடியும் என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும் என்பதையும் நாம் மேலும் மேலும் கற்றுக்கொள்கிறோம் என்று விளக்கினார்.
கேள்விகள் எழுப்பிச் சிந்திப்போம்
சோதனையின் போது, என் வாழ்க்கையில், இறைவனின் இருப்பையும் உதவியையும் நான் அனுபவித்த காலங்களை என்னால் நினைவில் கொள்ள முடிகிறதா? எனது வாழ்க்கையில் எதிர்நிலை என்னும் ஒரு புயல் காற்றால் நான் ஆட்கொள்ளப்படும்வேளை, நான் கலக்கத்தில் மூழ்கி விடுகிறேனா அல்லது இயேசுவைப் பற்றிக்கொண்டு, இறைவேண்டலிலும், இறைவார்த்தையைக் கேட்பதிலும், ஆராதனையிலும், இறைநம்பிக்கையின் உடன்பிறந்த பகிர்தலிலும் உள அமைதியைப் பெறுகிறேனா என்ற கேள்விகளை எழுப்பிச் சிந்திப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
அன்னை மரியாவின் துணையை வேண்டுவோம்
கடவுளின் விருப்பத்தை மனத்தாழ்மையுடனும் மனவுறுதியுடனும் ஏற்றுக்கொண்ட நம் அன்னை கன்னி மரியா, கடினமான தருணங்களில், அவரில் இழந்த நிறையமைதியை நமக்கு அருள்வாராக என்று கூறி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அவர்களுக்கு வழங்கி, ஞாயிறு மூவேளை செபவுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்