காங்கோவில் படுகொலைகள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் இருந்து மோதல்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய வேதனையான செய்திகள் தொடர்ந்து வருவது தனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 16, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளின் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரைக்குப் பின்பு இவ்வாறு கூறிய திருத்தந்தை, அந்நாட்டில் படுகொலைகள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
வன்முறையை நிறுத்தவும் பொதுமக்களின் உயிரைப் பாதுகாக்கவும் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு தேசிய அதிகாரிகளுக்கும் அனைத்துலகச் சமூகத்திற்கும் தான் வேண்டுகோள் விடுப்பதாகக் கூறிய திருத்தந்தை, அங்கே பாதிக்கப்படும் மக்களில் பலர் கிறிஸ்தவர்கள் என்றும் குறிப்பிட்டார்.
இந்த மோதல்களில் கொல்லப்படுபவர்களை மறைசாட்சியர் என்று வர்ணித்த திருத்தந்தை, அவர்களின் உயிர்த்தியாகம் என்பது முளைத்து, பலன் தரும் விதை என்றும், அவ்விதை மனவலிமையுடனும், உறுதியுடனும் நற்செய்திக்கு சான்றுபகர நமக்குக் கற்றுக்கொடுக்கிறது என்றும் கூறினார்.
காங்கோ போன்று போரால் பீடிக்கப்பட்டுள்ள ஏனைய நாடுகளையும் நினைவுகூர்ந்து தொடர்ந்து இறைவேண்டல் செய்வோம் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, உக்ரைன், புனித பூமி, சூடான், மியான்மர் மற்றும் எங்கு மக்கள் போரினால் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் அமைதிக்காக இறைவேண்டல் செய்வதை நிறுத்த வேண்டாம் என்றும் விண்ணப்பித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்