மறுவாழ்வைக் கொடுக்க நம்மைத் தொட்டுக் குணப்படுத்தும் கடவுள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
கடவுள் நம் கரங்களைப் பிடித்து நம்மை மேலே உயர்த்துபவர், துன்பங்களினால் வாடிக் கொண்டிருக்கும் நபர் தன்னைத்தொட்டுக் குணம்பெற அனுமதிப்பவர், நமக்கு மறுவாழ்வைக் கொடுப்பவர் என்றும், திருஅவை,உலகம் மற்றும் சமூகத்தில் உள்ள அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் மாதத்தின் இறுதி வாரமாகிய 30 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பொதுக்காலத்தின் 13 ஆம் ஞாயிற்றுக்கிழமை நற்செய்தி வாசகமான தொழுகைக்கூடத் தலைவரின் மகள் குணமாதல் மற்றும் இரத்தப்போக்குடைய பெண் குணமாதல் பகுதி பற்றி வாசித்து அதுபற்றிய கருத்துக்களை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடுதல் என்னும் செயல் பற்றி எடுத்துரைத்து இரண்டு அற்புதங்களும் ஒரே நிகழ்வில் நடைபெறுகின்றன என்றும் கூறினார்.
யாயீரின் மகள், இரத்தப்போக்குடைய பெண் ஆகிய இருவருக்கும் உடல்சார் குணப்படுத்தல் நிகழ்கின்றன என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரத்தப்போக்குடைய பெண் தன் ஆடையைத் தொட இயேசு அனுமதித்தார், இறந்ததாகக் கருதப்பட்ட யாயீரின் மகளை தொட்டுக் குணப்படுத்த இயேசு தயங்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், தீட்டு என்று அக்காலச் சமூகம் கருதியதை இயேசு சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்களைத் தொட்டுக் குணமாக்கினார் என்றும், கடவுள் உடல் நலமற்றவர்களைத் தீட்டு என்று கருதுவது கிடையாது என்பதை இயேசு தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.
தீட்டு, அசுத்தம் என்பது உடல், உணவு, நோய், அதனால் ஏற்படும் மரணம் போன்றவற்றிலிருந்து வருவதில்லை, மாறாக தூய்மையற்ற இதயத்திலிருந்தே வருகின்றது என்பதை இயேசு தனது செயல்களால் எடுத்துரைத்தார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உடல் மற்றும் உள்ள வேதனைகள், ஆன்மாவின் காயங்கள், நம்மை நசுக்கும் சூழ்நிலைகள், மற்றும் பாவங்கள் முன்னிலையில் கடவுள் நம்மைக் கைவிடுவதில்லை, நம்மைத் தொட்டுக் குணப்படுத்த தயங்குவதில்லை, நம்மைத் தீர்ப்பிடுவதில்லை, மாறாக, நம் அருகில் வந்து நம்மைத் தொடுகின்றார், நாம் அவரைத்தொட அனுமதிக்கின்றார், சாவிலிருந்து நம்மை மீட்கின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை.
எப்போதும் நம்மை மகனே, மகளே எழுந்திரு என்று கூறி, அரவணைக்கும் கடவுளின் உருவத்தை நம் கண்முன் நிறுத்தி வாழ வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், கடவுள் யாரையும் எதிர்மறையாக முத்திரை குத்துவதில்லை, எல்லோரையும் சமமாகக் கருதுகின்றார், அதுபோல நாமும் எந்தவிதமான முன்தீர்மானம், முத்திரை, எதிர்மறை எண்ணங்கள் இன்றி வாழ வலியுறுத்தினார் திருத்தந்தை.
தூய கன்னி மரியாவிடம் இதற்கான அருள்வேண்டி செபிப்போம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், மென்மையான அன்னை மரியா நமக்காகவும் முழு உலகத்திற்காகவும் இறைவனிடம் பரிந்து பேசட்டும் என்று கூறி மூவேளை செப உரையைத் தொடர்ந்து தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்