உலக அமைதிக்காக உடன்பிறந்த உறவில் ஒன்றித்து இறைவேண்டல் செய்வோம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
பல ஆண்களும் பெண்களும் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தின் கைதிகளாக இருக்கும் இவ்வேளையில், திருஅவை எப்போதும், எல்லா இடங்களிலும் மற்றும் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவை 'நமது நம்பிக்கை' என்று அறிவிக்கும் பணியைக் கொண்டுள்ளது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 28, இவ்வெள்ளியன்று, நாளை கொண்டாடவிருக்கும் புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவை முன்னிட்டு, கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் தலைமை இல்ல பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இணைந்து சான்று பகரவேண்டியதன் அவசியத்தையும் அவர்களுக்கு வலியுறுத்தினார்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமில், திருத்தந்தை ஆறாம் பவுல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தந்தை அத்தேனாகோரஸ் இருவருக்கும் இடையேயான சந்திப்பின் வழியாக இந்த நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான பயணம் புதிய உத்வேகத்தைப் பெற்றது என்பதையும் தனது உரையில் நினைவுகூர்ந்துள்ளார் திருத்தந்தை.
பல நூற்றாண்டுகளின் பரஸ்பரப் பிரிவினைக்குப் பிறகு, அந்தச் சந்திப்பு, இன்று இறைவனின் உதவியோடு, நற்கருணை விருந்தில் நாம் ஒன்றாகப் பங்குகொள்ளும் நாளில், வர ஏங்கும் ஆண், பெண் அனைவரின் இதயங்களையும் மனதையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தும் பெரும் நம்பிக்கையின் அடையாளமாக இருந்தது என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது, மே 2014-இல், அந்த வரலாற்று நிகழ்வின் ஐம்பதாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயும் தானும் எருசேலமுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டதை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, அந்த அனுபவம் தனக்கு மகிழ்வைத் தந்ததாகவும், உடன்பிறந்த உறவில் இன்னும் ஆழமாக வளர உதவியதாகவும் உரைத்தார்.
இது நமது பல கூட்டங்களிலும், கத்தோலிக்கத் திருஅவைக்கும், ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கும் இடையே உள்ள உறுதியான ஒத்துழைப்பின் பல நிகழ்வுகளிலும், திருஅவைகளுக்கும் உலகிற்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில், அதாவது படைப்பின் பராமரிப்பு, மனித மாண்பை பாதுகாத்தல், மற்றும் அமைதியைக் கட்டியெழுப்புவதில் உதவியுள்ளது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
இந்தக் காரணத்திற்காக, கத்தோலிக்கத் திருஅவைக்கும் ஆர்த்தடாக்ஸ் அவைக்கும் இடையிலான இறையியல் உரையாடலுக்கான கூட்டு பன்னாட்டு ஆணையத்தின் பணியை ஊக்குவிக்க விரும்புகிறேன் என்றும், இது நுட்பமான வரலாற்று மற்றும் இறையியல் பிரச்சினைகளை ஆய்வு செய்வதில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
இந்தச் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள மேய்ப்புப் பணியாளர்கள் மற்றும் இறையியலாளர்கள் முற்றிலும் கல்வி விவாதங்களுக்கு அப்பால் சென்று, திருஅவையின் வாழ்க்கைக்குத் தூய ஆவியார் சொல்வதை பணிவுடன் கேட்பார்கள் என்பது தனது நம்பிக்கை என்றும் கூறினார் திருத்தந்தை.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய சூழலில், போர் முடிவுக்கு வர, நாடுகளின் தலைவர்களும் மோதலில் ஈடுபட்டுள்ள கட்சிகளும் அமைதிக்கான பாதையை மீண்டும் கண்டுபிடிக்கவும், அனைத்துக் கட்சிகளும் ஒருவரையொருவர் அடையாளம் காணவும், அமைதிக்காகவும் உடன்பிறந்த சகோதரர் சகோதரிகளாக நாம் ஒன்றித்து இறைவேண்டல் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவசரத்தையும் நமக்குக் காட்டுகின்றன என்றும் விளக்கினார் திருத்தந்தை.
இந்தக் காரணத்திற்காகவே 'நம்பிக்கையின் திருப்பயணிகள்' என்ற தலைப்பில் வரும் 2025-ஆம் ஆண்டை யூபிலி ஆண்டாக அறிவித்துள்ளதாகக் கூறிய திருத்தந்தை, நீங்களும் நீங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் திருஅவையும் இந்த அருளின் ஆண்டில் உங்கள் இறைவேண்டல்களுடன் இணைந்து ஆதரவளிக்க முடிந்தால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும், அதனால் ஏராளமான ஆன்மிகப் பலன்களும் குறைவுபடாது என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
2025-ஆம் ஆண்டு நீசேயாவின் முதல் கிறித்தவ ஒன்றிப்பு அமைப்பின் 1700-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆண்டு நிறைவுவிழா, ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவில் அனைத்து விசுவாசிகளையும் தங்கள் நம்பிக்கைக்கும், அதிக ஒன்றிப்புக்கான விருப்பத்திற்கும் இணைந்து சான்றுபகர ஊக்குவிக்கும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்