தேடுதல்

தூய ஆவியாரின் வல்லமையால் இயேசு நோயாளர்களுக்கு நலமளித்தார்!

திருத்தந்தை பிரான்சிஸ் தனது மூவேளை செப உரையில் இயேசு கொண்டிருந்த இருவகையான சுதந்திரம், உண்மையின் பக்கம் நின்று போராடியது மற்றும் சுதந்திரத்தைப் பரவச்செய்தவற்கான நமது கடமைகளையும் பொறுப்புகளையும் எடுத்துரைத்தார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இயேசு நற்செய்தியை ஆறிவித்ததும் நோயாளர்களைக் குணமப்படுத்தியதும் உண்மையில் தூய ஆவியாரின் வல்லமையால்தான் என்றும், நிபந்தனை இல்லாமால் அன்புகூரும் மற்றும் கணக்கிடாமல் பணியாற்றும் தெய்வீக விடுதலையை அவரே அவருக்கு வழங்கினார் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

ஜூன் 9, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.

இன்றைய ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் (மாற் 3:20-35) அடிப்படையில் தனது மூவேளை செப உரை சிந்தனைகளை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு தனது பொதுவாழ்வுப் பணியைத் தொடங்கிய பிறகு சந்தித்த இருவேறு எதிர்வினைகளைக் குறித்தும் அவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

ஏழ்மையில் சுதந்திரம்

இயேசு தனது ஏழ்மையைக் கடைப்பிடிப்பதில் மிகவும் சுதந்திரமாக இருந்தார். அதனால்தான் அவர் தனது சொந்த ஊரான நாசரேத்தின் பாதுகாப்பை விட்டுச் சென்று ஏழ்மை மற்றும் நிச்சயமற்ற வாழ்க்கையைத் தழுவினார் (காண்க மத் 6:25-34), என்றும், நோயாளர்கள் மற்றும் தன்னிடம் உதவிநாடி வந்த அனைவரிடத்திலும் எப்போதும் எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் அக்கறைகாட்டினார் (காண்க. மத் Mt 10:8). என்றும் கூறினார் திருத்தந்தை,

அதிகாரத்தில் சுதந்திரம்

உண்மையில், அவர் தன்னைப் பின்பற்றுமாறு பலரை அழைத்தபோதிலும், அவர் ஒருபோதும் யாரையும் அவ்வாறு செய்ய வற்புறுத்தவுமில்லை, அதேவேளையில் வலிமை வாய்ந்தவர்களின் ஆதரவை அவர் நாடவுமில்லை என்று விளக்கிய திருத்தந்தை, அவர் எப்போதும் வாழ்வில் புறக்கணிக்கப்பட்ட மக்களின் பக்கம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார் என்றும்,  தனது சீடர்களுக்கும் அவ்வாறே செய்யக் கற்றுக் கொடுத்தார் (காண்க. லூக் 22:25-27) என்றும் சுட்டிக்காட்டினார்.

உண்மையின் பக்கம் நின்றார்

இறுதியாக, புகழ் மற்றும் அங்கீகாரத்தைப் பின்தொடர்வதில் இருந்து இயேசு தன்னை விடுவித்துக் கொண்டார் என்றும், இந்தக் காரணத்திற்காக அவர் உண்மையைப் பேசுவதை விட்டுவிடவில்லை என்றும், கூறிய திருத்தந்தை, அவர் புரிந்துகொள்ளப்படாமல் போனாலும் (காண்க மத் 3:21) கூட, புகழடைய விரும்பாமல், வாழ்வின் இறுதிநிலை வரை சிலுவையில் இறப்பதை ஒன்றையே தனது நோக்கமாகக் கொண்டிருந்தார் என்றும், தன்னை மிரட்டவோ, விலைகொடுத்து வாங்கவோ, எவரும் பாழ்ப்படுத்தவோ அனுமதிக்கவில்லை (காண்க மத் 10:28) என்றும் எடுத்துக்காட்டினார்.

சுதந்திரத்தின் நறுமணத்தைப் பரவச் செய்வோம்

இயேசு அகத்திலும் புறத்திலும் விடுதலைப்பெற்ற ஒரு இறைமனிதராக இருந்தார் என்றும், இது நமக்கும் முக்கியமானது. ஏனென்றால், இன்பம், அதிகாரம், பணம் அல்லது அங்கீகாரம் போன்றவற்றின் நாட்டத்தால் நம்மை நாம் நிபந்தனைக்குட்படுத்த அனுமதித்தால், நாம் இந்த விடயங்களுக்கு அடிமையாகிவிடுவோம் என்றும் தனது உரையில் எச்சரித்தார் திருத்தந்தை.

அதேவேளையில், கடவுளின் அன்பு நம் இதயங்களை நிரப்பவும் விரிவுபடுத்தவும் நாம் அனுமதித்தால், அதை மற்றவர்களுக்குத் திருப்பித் தருவதன் வழியாகத் தானாகவே நிரம்பி வழிய அனுமதித்தால், பயம், மற்றும் நிபந்தனையின்றி, நாம் வளர்கிறோம் என்றும், இதனால் சுதந்திரம், மற்றும் அதன் மணம்தரும் நறுமணத்தை நம்மைச் சுற்றிலும், நம் வீடுகளிலும், நம் குடும்பங்களிலும், நமது சமூகங்களிலும் பரவச் செய்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை.

கேள்விகள் எழுப்பிச் சிந்திப்போம்

ஆகவே, நான் சுதந்திரமான மனிதனா? அல்லது பணம், அதிகாரம் மற்றும் வெற்றி போன்ற தொன்மப் புனைவுகளால் (Myths) என்னை நானே சிறையில் அடைக்க அனுமதிக்கிறேனா? என்னையும் மற்றவர்களின் அமைதியையும் இவற்றிற்காகத் தியாகம் செய்கிறேனா? நான் வாழும் மற்றும் பணியாற்றும் சூழல்களில், சுதந்திரம், நேர்மை, தன்னிச்சையின் புதிய காற்றை நான் பரவச் செய்கிறேனா? ஆகிய கேள்விகளை எழுப்பிச் சிந்திப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

அன்னை மரியா துணை புரியட்டும்

அன்னை கன்னி மரியா, இயேசு நமக்குக் கற்பித்தபடி, நாம் கடவுளுக்குரிய பிள்ளைகளின் சுதந்திர மனப்பான்மையுடன் வாழவும் அன்புகூரவும் நமக்கு உதவட்டும் (காண்க. உரோ 8:15, 20-23) என்று கூறி தனது மூவேளை செபவுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 June 2024, 09:25