நாம் ஒருவரையொருவர் உடன்பிறந்தோராக ஏற்க இயேசு நமக்கு கற்பிக்கிறார்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒரே கடவுளை வழிபடும் கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லிம்கள், ஆபிரகாமை விசுவாசத்தின் தந்தை என்று வெவ்வேறு வழிகளில் குறிப்பிடுகிறார்கள் என்றும், இன்றைய உலகில், உடன்பிறந்த உறவுக்கான சாட்சியம் என்பது மிகவும் இன்றியமையாதது மற்றும் விலைமதிப்பற்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 26, இப்புதன் காலை, இத்தாலியின் Bologna-விலிருந்து வந்த முஸ்லிம்கள் குழுவொன்றைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் ஒருவரையொருவர் உடன்பிறந்தோராக ஏற்க இயேசு நமக்கு கற்பித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நேர்மையான மற்றும் மரியாதைக்குரிய உரையாடல் என்பது கடவுளின் விருப்பத்திற்குக் கீழ்ப்படிய விரும்பும் நமக்குரிய ஒரு கடமையாகும் என்பதையும் அவர்களிடம் சுட்டிக்கட்டினார் திருத்தந்தை.
தனது பிள்ளைகள் ஒருவரையொருவர் அன்புகூர்வதும், ஒருவருக்கொருவர் உதவுவதும், அவர்களுக்கு இடையே ஏதேனும் சிரமமோ அல்லது தவறான புரிதலோ ஏற்படும்போது, அவர்கள் பணிவு மற்றும் பொறுமையுடன் ஓர் உடன்படிக்கைக்கு வரவேண்டும் என்பதும்தான் உண்மையில், ஒரு தந்தையின் விருப்பமாக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டுக் காட்டினார் திருத்தந்தை.
இத்தகைய உரையாடலானது, ஒவ்வொரு நபரின் மனிதமாண்பு மற்றும் உரிமைகள் திறம்பட அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதையும், இந்த உரிமைகளின் உச்சியில் மனச்சான்று மற்றும் மதத்தின் சுதந்திரம் உள்ளது, அதாவது ஒவ்வொரு மனிதரும் தனது மதத்தைத் தேர்வு செய்வது தொடர்பாக முழுமையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்