சவாலான ஆற்றல் மாற்றத்தை எதிர்கொள்ளும் மனித இனம்
ஜெயந்த் ராயன், வத்திக்கான்
உரோமையில் Centesimus Annus Pro Pontifice அறக்கட்டளை சார்பாக ''செயற்கை நுண்ணறிவு உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப கருத்தியல்: மனித இனத்தின் நல்வாழ்வு, இயற்கையின் பராமரிப்பு மற்றும் அமைதியான உலகத்தை எவ்வாறு மேம்படுத்துவது'' என்ற தலைப்பில் நடைபெற்ற உலகளாவிய மாநாட்டில் பங்கேற்றவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் சந்தித்து உரையாற்றினார்.
தனது உரையில், பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வில் செயற்கை நுண்ணறிவு வியத்தகு முறையில் ஆதிக்கம் செலுத்தி வருவதால், இக்கருத்து கவனத்துக்குரிய ஒன்றாகும் என்றும், இது நம் வாழ்க்கைத் தரம், தனிப்பட்ட மற்றும் உலகளாவிய உறவு, அதன் உறுதித்தன்மை போன்றவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார் திருத்தந்தை.
செயற்கை நுண்ணறிவின் தற்போதைய மற்றும் எதிர்கால அம்சங்களையும், உற்பத்தித்திறன், வளர்ச்சியின் அடிப்படையில் அது ஏற்படுத்தும் நன்மைகள் மற்றும் அபாயங்களைப் பகுப்பாய்வு செய்வதற்கு பல துறைகளின் கூட்டு முயற்சி அவசியம் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், உலக அமைதி தினத்தின்போது தான் அளித்த உரையிலும், அண்மையில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் செயற்கை நுண்ணறிவின் தாக்கங்கள் குறித்து உரையாற்றியதையும் நினைவூட்டினார்.
செயற்கை நுண்ணறிவு, அடிப்படையில் என்ன செய்ய வேண்டும் என்று கேள்வியெழுப்பிய திருத்தந்தை அவர்கள், இது மனித குலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா? தனிநபர்களின் நல்வாழ்வையும் ஒருங்கிணைந்த வளர்ச்சியையும் மேம்படுத்த உதவுகிறதா? அல்லது தொழில்நுட்ப மேம்பாட்டில் ஒருசிலரின் கைகளில் குவிந்துள்ள ஆற்றலை அதிகப்படுத்த உதவுகின்றதா? என்கிற கேள்விகளுக்கு நாம் பதிலளிக்க முயல வேண்டும் என்றார்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எடுக்கப்படும் முடிவுகளில் தத்துவம் மற்றும் சட்டத்தின் பங்களிப்பு தேவை என்றும், மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்படும் கண்டுபிடிப்புகளைத் தூண்டுவதற்கும், விரும்பத்தகாத விளைவுகளைத் தடை செய்வதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கும் சரியான வழிமுறைகள் அவசியம் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கல்வி, தகவல் தொடர்பு மற்றும் அனைத்துத் துறைகளும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் விரிவுபடுத்துவதற்கும், எதிர் காலத் தலைமுறையினருக்கு குறிப்பாக அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்து, இக்கருவிகளை எவ்வாறு மதிப்பீடு செய்வது என்பதைக் கற்பிப்பதற்கும் ஓர் ஒருங்கிணைந்த செயல்முறையைத் தொடங்க வேண்டும் என்றார்.
மேலும், பாதுகாப்புத் துறைகளில் செயற்கை நுண்ணறிவின் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஆராய்தல், வேலை வாய்ப்புகளில் இவற்றின் ஆதிக்கத்தை ஆராய்தல், மக்களின் உறவு, அறிவாற்றல் திறன், அவர்களின் நடத்தைகளில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் மற்றும் அதன் கட்டுப்பாட்டை ஆராய்தல் அவசியம் எனவும், இது ஒருபோதும் மனிதர்களைக் குறைத்து மதிப்பிட அனுமதிக்கக்கூடாது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
மனிதகுலம் தற்போது ஒரு சவாலான ஆற்றல் மாற்றத்தை எதிர்கொள்கிறது என்றும், அம்மாற்றம் எவ்வகையிலும் மனித ஆற்றலை கட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், உண்மையில் நாம் தொழில்நுட்ப அதிகாரத்திற்கு சரணடைகிறோமா அல்லது மனித ஆற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோமா என்று நமக்குள்ளே கேள்வியெழுப்ப வேண்டுமென்றும் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்