தேடுதல்

மரியாவின் திருவுருவப் படத்திற்கு முன்பாக இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை மரியாவின் திருவுருவப் படத்திற்கு முன்பாக இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை   (Vatican Media)

நாத்சிகளிடமிருந்து உரோமை விடுவிக்கப்பட்டதன் 80-ஆம் ஆண்டு நினைவு!

நம் அன்றாட வாழ்வில் குடும்பத்தில், பணிகளில், பள்ளி மற்றும் நண்பர்களிடையே நல்லுறவை பேணுவதும், இறுக்கமான சூழல்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் மிகவும் அவசியம் : திருத்தத்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நாத்சிகளிடமிருந்து உரோமை நகரம் விடுவிக்கப்பட்ட பிறகு, அந்நகரில் உள்ள ‘Salus Populi Romani’ என்ற பெயர்கொண்ட அன்னை மரியாவின் திருவுருவப் படத்திற்கு முன்பாக ஏற்படுத்தப்பட்ட உறுதியேற்பின் 80-ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்நிகழ்வு இவ்வாறு நினைவுகூரப்படுவது இதுவே முதல் முறை என, ஜூன் 4, இச்செவ்வாய்கிழமை மாலை உரோமை நகரின் துணை ஆயர் Baldassare Reina அவர்களுக்கு எழுதியுள்ள இந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக செபிக்கவும், போரின் பயங்கரமான கொடுமையைப் பற்றி புதிதாக சிந்திக்கவும் இது ஒரு சந்தர்ப்பம் என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

உக்ரைன், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல், சூடான், மியான்மர் மற்றும் பிற இடங்களில் நிகழ்ந்து வரும் போர்களில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் நம் மனசாட்சியைத் தட்டியெழுப்புகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, ஆயுதங்களுக்கு நாம் அடிபணியக்கூடாது, இடம் கொடுக்கவும் கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமைதி என்பது கடவுளிடமிருந்து கிடைத்துள்ள ஒரு கொடை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் மக்கள் அதற்குத் தேவை என்றும், ஆகவே,  நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புபவர்களாகவும் நம்பிக்கையின் சாட்சிகளாகவும் உங்களை அர்ப்பணித்துக்கொள்ளுங்கள் என்றும் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.

மேலும் நமது அன்றாட வாழ்வில் குடும்பத்தில், பணிகளில், பள்ளி மற்றும் நண்பர்களிடையே நல்லுறவை பேணுவதும், இறுக்கமான சூழல்களில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் மிகவும் அவசியம் என்பதையும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

ஒவ்வொர் ஆண்டும் டிசம்பர் 8ஆம் தேதி அமல உற்பவ அன்னை திருவிழாவின்போது, மாலையில் உரோம் நகரின் மையத்தில் உள்ள Spagna வளாகம் சென்று, அன்னைமரியா திருவுருவச் சிலைக்கு மாலையிடும் திருத்தந்தை, தனது திருப்பயணத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் இங்கே செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 June 2024, 15:00