ஓராண்டாக நிகழும் மோதல்களால் சூடானில் அமைதி நிலைபெறட்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
சூடானில் ஓர் ஆண்டிற்கும் மேலாக நீடித்து வரும் போருக்கு இன்னும் அமைதியான தீர்வு கிடைக்காத நிலையில், அந்நாட்டிற்காக இறைவேண்டல் செய்ய உங்கள் அனைவரையும் அழைக்கிறேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 2, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரைக்குப் பின்பு இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
சூடான் நாட்டின் புலம்பெயர்ந்தோர் அண்டை நாடுகளில் வரவேற்பையும் பாதுகாப்பையும் பெறட்டும் என்று கூறிய திருத்தந்தை, போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரேல் மற்றும் மியான்மார் நாடுகளில் அமைதி நிலவிட தான் இறைவேண்டல் செய்வதாகவும் உரைத்தார்.
மேலும் அதன் தலைவர்கள் ஞானம் பெறவும், இதனால் தாக்குதலின் அதிகரிப்பு குறைக்கப்படவும் மற்றும் அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைகளில் செலவிடப்படவும் தான் செபிப்பதாகவும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
இப்போரால், சூடான் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கீடுகளின்படி, தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள ஏறக்குறைய ஒரு கோடி மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தோராக உள்ளனர். மேலும் 20 இலட்சம் மக்கள் பாதுகாப்புக்காக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சூடான் இராணுவத்திற்கும் RSF எனப்படும் புரட்சிப்படையினருக்கும் இடையில் மனிதத்தன்மையற்ற முறையில் ஆயுத மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. மேலும் இரு தரப்பினரும் மோதலைத் தொடங்கியதாக ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்