தேடுதல்

புதிய நூல் புதிய நூல்  

நிலைவாழ்வு குறித்து பேசியது மட்டுமன்றி, அதை வழங்கியும் உள்ளார் இயேசு!

திருவிவிலியம் உண்மையாகவே நம் வாழ்க்கையைக் கையாள நமக்குத் தேவையான ஊட்டமளிக்கும் உணவாக அமைந்துள்ளது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம்

மனுக்குலம் இறையாட்சியில் பங்குபெற வேண்டும் என்பதற்காக, கடவுள் மனுவுருவெடுத்தலில் உண்மையாய் இருந்தார் என்றும்,  இதன்வழியாக, அவர் மனித வரலாற்றில் பங்குகொள்ள திருவுளம் கொண்டார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அமெரிக்காவைச் சேர்ந்த இயேசு சபை அருள்பணியாளார் ஜேம்ஸ் மார்ட்டின் அவர்கள் எழுதியுள்ள 'இயேசுவின் மிகப்பெரும் அருளடையாளம் : இலாசரின் உயிர்த்தெழுதல்' என்ற புதிய நூலின் இத்தாலியப் பதிப்பிற்கு எழுதியுள்ள அணிந்துரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

அருள்பணியாளர் ஜேம்ஸ் விவிலிய உரையை துடிப்புள்ளதாக வைக்கிறார் என்றும், இந்த பத்தியை ஆழமாக ஆராய்ந்து, அவற்றின் பல அம்சங்களையும், அழுத்தங்களையும், விளக்கங்களையும் படம்பிடித்து, பலதரப்பட்ட எழுத்தாளர்களின் பார்வையாலும் புலமையாலும் அவர் அதை பகுப்பாய்வு செய்கிறார் என்றும் எடுத்திக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

திருவிவிலியம் உண்மையாகவே நம் வாழ்க்கையைக் கையாள நமக்குத் தேவையான ஊட்டமளிக்கும் உணவாக அமைந்துள்ளது என்றும், இது ஒவ்வொரு காலத்திலும் இடத்திலும் வாழும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீண்ட காலத்திற்கு முன்பே கடவுள் அனுப்பிய  அன்புக் கடிதம் என்றும் தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இறை வார்த்தையைக் கருவூலமாகக் கருதுவது, திருவிவிலியத்தை அன்புகூர்வது, அதை நாள்தோறும்  நம்முடன் எடுத்துச் செல்வது, ஒரு சிறிய அளவிலான விவிலிய நூலை நம் சட்டைப் பைகளில் வைத்துக் கொள்வது, ஒரு முக்கியமான சந்திப்பு வேளையில் அதனை நம் ஸ்மார்ட்போனில் எடுத்துக்கொள்வது போன்ற செயல்கள் யாவும், கடவுளின் வார்த்தைகள் உயிருள்ளது என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன என்றும் உரைத்துள்ளார்.

இறைவனின் நற்செய்தி உறுதியானது, என்றென்றும் நிலைத்திருப்பது, இது வரலாறு மற்றும் அன்றாட வாழ்வைப் போலவே நமது உள்நிலை மற்றும் நமது உள் வாழ்க்கையுடன் தொடர்புடையது என்று விளக்கியுள்ளார் திருத்தந்தை,

இயேசு, நிலைவாழ்வு குறித்து வார்த்தைகளில் மட்டும் வெளிப்படுத்தவில்லை, மாறாக, அதை அவரே நமக்கு வழங்கியும் இருக்கின்றார் என்று எடுத்துரைத்துள்ள திருத்தந்தை, உயிர்த்தெழுதலும் வாழ்வு தருபவனும் நானே என்று அவர் கூறியதுடன் மட்டுமன்றி,  இறந்து மூன்று நாள்களாய் ஆகியிருந்த இலாசரை உயிர்ப்பித்ததன் வழியாக அதனை நிறைவேற்றியும் காட்டினார் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 June 2024, 15:37