போரால் சிதைந்துள்ள உலகிற்குத் திருநற்கருணை தேவைப்படுகிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடவுள் நம்மைக் கைவிடுவதில்லை, ஆனால் எப்போதும் நம்மைத் தேடுகிறார், நமக்காகக் காத்திருக்கிறார், ஆதரவற்றவர்களாக நம்மை அவரது கரங்களில் ஒப்படைக்கும் நிலையிலும் கூட அவர் நமக்குத் துணையாக நிற்கிறார் என்று கூறினார் திருத்தந்தை.
ஜூன் 2, இஞ்ஞாயிறன்று, இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழா திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட வேளை, உரோம் நகரின் புனித யோவான் இலாத்தரன் பெருங்கோவிலில் தலைமையேற்று சிறப்பித்த திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.
கடவுளின் கொடைகளுக்கு நன்றி கூறுவோம்
திருப்பலியின் மறையுரையில் நற்கருணையை மையப்படுத்தி, நன்றி, நினைவூட்டல், மற்றும் இருப்பு என மூன்று கருப்பொருள்களின் அடிப்படையில் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, நற்கருணை, நமது திறமைகளையும் திறன்களையும் சரியாகப் பயன்படுத்துவதன் வழியாக, நம் வாழ்வில் கடவுளின் பல்வேறு அருள்கொடைகளுக்கு நன்றியுடன் இருக்க கற்றுக்கொடுக்கிறது என்றும் உரைத்தார்.
உண்மைச் சுதந்திரம் பணிவில் வருகிறது
அதனைத் தொடர்ந்து இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பேசத்தொடங்கிய திருத்தந்தை, தனது திரு உடலையும் திரு இரத்தத்தையும் கொடுப்பதன் வழியாக, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நம்மையே நாம் காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும் என அவர் நம்மைக் கேட்கிறார் என்றும் தெரிவித்தார்.
உண்மையான சுதந்திரம் என்பது நம்மைப் பற்றி மட்டுமே சிந்தித்து, மற்றவர்களைப் பொருட்படுத்தாமல் நாம் விரும்பியதைச் செய்து வாழ்க்கையை அனுபவிப்பதைக் குறிக்கிறது" என்று கூறும் சிலர் இருக்கின்றனர். ஆனால் இது சுதந்திரம் அல்ல, மறைக்கப்பட்ட அடிமைத்தனம் என்று எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
உண்மையான சுதந்திரம் என்பது, அன்பினால் மட்டுமே உந்தப்பட்டு மற்றவர்களுக்குப் பணிவுடன் பணியாற்றுவதால் கிடைக்கிறுது என்றும் குறிப்பிட்டுக் காட்டினார் திருத்தந்தை.
வெறுப்பை அழிக்கும் நம்பிக்கையை உருவாக்குவோம்
திருநற்கருணையில் இருக்கும் கிறிஸ்து நம்மை ஒருபோதும் கைவிடுவதில்லை என்றும், அப்பத்தின் வடிவில் நாம் அவரை ஏற்றுக்கொள்ளும் பொருட்டு அவர் நமக்காகக் காத்திருக்கிறார் என்றும் கூறிய திருத்தந்தை, அவரது உண்மையான இருப்பு, தேவையில் இருக்கும் நம் சகோதரர் சகோதரிகளுடன் மிகவும் நெருக்கமாக இருக்க நம்மை அழைக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
போரின் அழிவுகளாலும், இடிபாடுகளாலும் நிறைந்துள்ள நம் தெருக்கள் மீண்டும் அமைதியின் பாதைக்குத் திரும்புவதற்குத் திருநற்கருணை தேவைப்படுகிறது என்றும், ஆகவே, அத்திருநற்கருணையின் நல்ல மற்றும் புதிய அன்பின் நறுமணத்தை உலகிற்குக் கொண்டுவரவேண்டி அவசரத் தேவை நமக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, வெறுப்பை அழித்தொழிக்கும் நம்பிக்கையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்