போரை நிறுத்துங்கள், போர் வழியாக அமைதியைக் கொணரமுடியாது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவைகளுக்கான திருப்பீடத்தின் மனிதாபிமான அமைப்பான ROACO என்பதன் அங்கத்தினர்களை ஜூன் 27, வியாழக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்கான தன் விண்ணப்பத்தை மீண்டும் புதுப்பித்ததுடன், போரால் வெளியேறும் மத்தியக் கிழக்கு நாடுகளின் கிறிஸ்தவர்களோடு தன் ஒருமைப்பாட்டையும் வெளியிட்டார்.
மத்தியக்கிழக்கு, உக்ரைன் உட்பட உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அமைதி நிலவ வேண்டும் என்ற விண்ணப்பத்தை மீண்டும் முன்வைத்த திருத்தந்தை, போரை நிறுத்துங்கள், போர் வழியாக அமைதியைக் கொணரமுடியாது என்பதை மீண்டும் அனைவருக்கும் விடுப்பதாகக் கூறினார்.
திருப்பீடத்தின் மனிதாபிமான உதவிகளுக்கான இந்த அமைப்பு தன் 97-வது ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை நான்கு நாட்களாக நடத்திய போது, புனித பூமி, உக்ரைன் மற்றும் எத்தியோப்பியாவின் இன்றைய நிலைகள் குறித்து விவாதித்ததுடன் தங்கள் எல்லைகளுக்கு வெளியே வாழும் கீழைவழிபாட்டுமுறை கத்தோலிக்கர்களின் மேய்ப்புப்பணி அக்கறை குறித்தும் கலந்துரையாடியது.
இப்பிறரன்பு குழுவைச் சந்தித்த திருத்தந்தை, பல கீழைவழிபாட்டுமுறை திருஅவைகள், மறைசாட்சிய திருஅவைகளாக மாறியுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.
புனித பூமி, உக்ரைன், சிரியா, லெபனன், மத்திய கிழக்கு நாடுகள் முழுமையும், கவ்காசுஸ், எத்தியோப்பியாவின் திக்ரே ஆகியவைகளில் கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்கர்கள் போரின் தாக்கத்தை பெரிய அளவில் உணர்ந்து வருவதாகவும் எடுத்துரைத்தார்.
உலகில், குறிப்பாக உக்ரைன் மற்றும் புனித பூமியில் அமைதி நிலவவும், அங்குள்ள போர்க் கைதிகள் விடுவிக்கப்படவும் அனைவரும் செபிப்போம் என்ற விண்ணப்பத்தையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்