தேடுதல்

புனித பெலிஸ் மற்றும் இரக்கத்தின் அன்னை புதல்வியர் சபைகளின் சகோதரிகளை சந்திக்கும் திருத்தந்தை புனித பெலிஸ் மற்றும் இரக்கத்தின் அன்னை புதல்வியர் சபைகளின் சகோதரிகளை சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

கடவுளின் கரங்களில் நாம் அவரது கருவிகளாக இருக்கின்றோம்!

கடவுளின் விருப்பத்தை நீங்கள் தொடர்ந்து கடைபிடிக்கவும், நீங்கள் எடுத்துக்கொண்ட வார்த்தைப்பாடுகளுக்கு விசுவாசமாக இருக்கவும், ஆவியின் செயலுக்கு இணங்கி நடக்கவும் உங்களை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடவுளின் ஞானக் கரங்களில் நாம் அவரது கருவிகளாக இருக்கின்றோம்! என்பதையும், நாம் கடவுளுக்குச் சொல்லும் 'ஆம்' என்றதொரு சிறிய வார்த்தையின் வழியாகக் கடவுள் நம்மிடமிருந்து எதை பெறுவார் என்பதைக் குறித்தும் சிந்திப்போம் என்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 6, இவ்வியாழனன்று, இத்தாலியின் Cantalice நகர் புனித பெலிஸ் மற்றும் இரக்கத்தின் அன்னை புதல்வியர் சபைகளின் சகோதரிகளை அவர்தம் பொதுப் பேரவைகளை, முன்னிட்டு திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

தனது உரையைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவர்தம் சபைகளின் புனிதர்களின் வாழ்க்கை நூல்கள், வழிநூல்கள், தனிவரங்கள் ஆகியவற்றையெல்லாம் எடுத்துக்கூறி, அவற்றின் அடிப்படையில் தங்களின் வாழ்வை கட்டமைத்துக்கொள்ளும்படி அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

குறிப்பாக, இவ்விரு சபைகளைச் சார்ந்த நிறுவுனர்களின் வாழ்வு தனிப்பட்ட விதத்தில் தன்னை எப்படிக் கவர்ந்தது என்பதையும் அவர்களுக்கு எடுத்துக்கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பகத்தன்மையும் பிரமாணிக்கமும் நிறைந்த வாழ்வை மேற்கொள்ளுமாறும் அவர்களை அறிவுறுத்தினார்.

உங்கள் பணிக்கான வழிகாட்டும் விதமாக, நீங்கள் தேர்ந்தெடுத்த "கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது" (2 கொரி 5:14)  என்ற புனித பவுலடியாரின் வார்த்தைகளின்படி, கடவுள் மற்றும் அண்டை வீட்டாரின் அன்பு, தாராள மனப்பான்மையுடனும் சுதந்திரத்துடனும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்களிடம் விண்ணப்பித்தார் திருத்தந்தை

கடவுளின் விருப்பத்தை நீங்கள் தொடர்ந்து கடைபிடிக்கவும், நீங்கள் எடுத்துக்கொண்ட வார்த்தைப்பாடுகளுக்கு விசுவாசமாக இருக்கவும், ஆவியின் செயலுக்கு இணங்கி நடக்கவும் உங்களை நான் ஊக்குவிக்க விரும்புகிறேன் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2024, 14:57