தேடுதல்

நகைச்சுவைக் கலைஞர்கள் குழுவைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் நகைச்சுவைக் கலைஞர்கள் குழுவைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

நகைச்சுவைக் கலைஞர்களின் திறமை ஒரு விலைமதிப்பற்ற பரிசு

தனியாகச் சிரிப்பதைவிட ஒன்றாகச் சிரிப்பது எளிது. மகிழ்ச்சி நம்மைப் பகிர்வுக்கு இட்டுச்செல்வதோடு மட்டுமல்லாமல், சுயநலம் மற்றும் தனித்துவத்திற்கு மாற்றாக அமைகிறது.

ஜெயந்த் ராயன், வத்திக்கான்

கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நகைச்சுவைக் கலைஞர்கள் குழுவைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், நகைச்சுவைப் பேச்சு, நகைச்சுவை உணர்வு, மற்றும் முரண்நகை வழியாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞர்களை மதிப்பதாகக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். தொலைக்காட்சி, சினிமா, நாடகம், அச்சு ஊடகங்கள், பாடல்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பணிபுரியும் அனைத்து கலை வல்லுநர்களிலும், இவர்கள் மிகவும் விரும்பப்படுபவர்களாக மற்றும் பிரபலமானவர்களாக இருக்கக் காரணம்,  மக்களைச் சிரிக்க வைக்கும் பரிசை இவர்கள் வளர்த்துள்ளார்கள் என மேலும் உரைத்தார் திருத்தந்தை.

பல தனிப்பட்ட மற்றும் சமூகப் பிரச்சனைகளுக்கு மத்தியில் அமைதியையும் புன்னகையையும் பரப்பும் ஆற்றல் அவர்களிடத்தில் உள்ளது என்ற திருத்தந்தை, பல்வேறு தலைமுறைகள் மற்றும் கலாச்சாரப் பின்னணிகளிலிருந்து வரும் பல்வேறுபட்ட மக்களுடன் உரையாடும் திறன் கொண்ட வெகுசிலரில் நகைச்சுவைக் கலைஞர்களும் அடங்குவர் என்றார்.

சிரிப்பு என்பது பிறரை எளிதாகக் தொற்றிக்கொள்ளக்கூடிய ஒன்று என்ற திருத்தந்தை அவர்கள், தனியாகச் சிரிப்பதைவிட ஒன்றாகச் சிரிப்பது எளிது என்றும், மகிழ்ச்சி நம்மைப் பகிர்வுக்கு இட்டுச் செல்வதோடு மட்டுமல்லாமல், சுயநலம் மற்றும் தற்போக்கிற்கு மாற்றாக அமைகிறது என்றார்.

சிரிப்பது நம் மத்தியில் உள்ள சமூகத் தடைகளைத் தகர்த்தெறியவும், மக்களிடையே தொர்புகளை உருவாக்கவும், நம்முடைய உணர்வுகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தவும், பகிரப்பட்ட கலாச்சாரத்தை தொடர்ந்து கட்டியெழுப்பவும், சுதந்திரத்துக்கான தளத்தை உருவாக்குவதற்கு அவர்களுடைய தனிப்பட்டத் திறமையால் மக்களை ஒன்றிணைப்பதற்கும் உதவுகிறது என கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், வேடிக்கை விளையாட்டும், சிரிப்பும் மனித வாழ்க்கையின் மையம் என்றும், நம்மை வெளிப்படுத்தவும், கற்றுக்கொள்ளவும், சூழ்நிலைகளுக்கு அர்த்தம் தரவும் சிரிப்பு ஒரு கருவியாகப் பயன்படுகிறது என்றும் தெரிவித்தார்.

நகைச்சுவைக் கலைஞர்களின்  திறமை ஒரு விலைமதிப்பற்ற பரிசு எனவும், ஒரு புன்னகை நம் இதயங்களிலும் மற்றவர்களிடையேயும் அமைதியைப் பரப்புவதோடு,  நம் அன்றாட மன அழுத்தங்களைச் சமாளிக்க உதவுகிறது என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், பிரச்சனைகளுக்கு மத்தியில் அவற்றை சமாளிக்க மக்களை சிரிக்க வைக்க கலைஞர்கள் முயல்வதாகவும், சமூகத்தில் நடக்கும் அதிகராச் சுரண்டலை கண்டிக்க, முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர, முரண்பட்ட நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்ட, தகவல் தொடர்புகள் பயன்படுத்தும் எச்சரிக்கை, பயம், பதட்டம் போன்ற முறைகளை விடுத்து, மக்களைச் சிரிக்க வைத்து, விமர்சன ரீதியாக சிந்திக்க தூண்டுகிறார்கள் என்றார் திருத்தந்தை.

வெவ்வேறு வடிவங்களிலும் முறைகளிலும் நகைச்சுவையை சிந்திக்கவும் பேசவும் தெரிந்திருக்க கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை அவர்கள், நகைச்சுவை உணர்வு  என்பது பிறரின் இயலாமையைப்  புண்படுத்துவதோ, அவமானப்படுத்துவதோ இல்லை என்றும், நகைச்சுவை உணர்வு யாருக்கும் எதிரானது அல்ல மாறாக, வெளிப்படைத்தன்மை, பரிவு என  அனைத்தையும் உள்ளடக்கியது ஆகும் என்றார்.

கடவுளிடம் நாம் நிச்சயமாக சிரித்துப்பேச முடியும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நாம் விரும்பும் நபர்களுடன் விளையாடுவது மற்றும் கேலி செய்வதுபோலவே நம்மால் கடவுளிடமும் முடியும் என்றும், யூத ஞானமும் இலக்கிய மரபும் இதில் தலைச்சிறந்தது என்றும், நம்பிக்கையாளர்கள், குறிப்பாக ஏழைகளின் மத உணர்வுகளைப் புண்படுத்தாமல் இதைச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

புனித தாமஸ் மூரின் வார்த்தைகளுடன் செபிக்க விரும்புவதாக கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், ''இறைவா, எனக்கு நல்ல நகைச்சுவை உணர்வைத் தாரும்'' என்றும், தான் ஒவ்வொருநாளும் இந்த வரத்தைக் கேட்பதாகவும், ஏனென்றால் இது சரியான மனதுடன் மற்றவற்றை எதிகொள்ள உதவுவதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 June 2024, 14:45