முதியோர் நிராகரிக்கப்பட்டு கைவிடப்படுவது கருணைக்கொலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
முதியோர் நிராகரிக்கப்பட்டு கைவிடப்படுவதை மறைக்கப்பட்ட கருணைக்கொலை என குறிப்பிட்டு தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 15, சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, எத்தனையோ முறை முதியோர் நிராகரிக்கப்பட்டு கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனவும், இது மறைக்கப்பட்ட உண்மையான கருணைக்கொலை எனவும் தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், இத்தகையப் போக்கு, எதையும் பயன்படுத்திவிட்டு குப்பையில் எறியும் செயலாகும், இது நம் உலகிற்கு மிகவும் ஊறுவிளைவிக்கும் ஒரு செயல் என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நச்சுத்தன்மையுடைய இந்த தூக்கியெறியும் கலாச்சாரத்திற்கு எதிராக நாம் அனைவரும் போராடவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்துள்ளார்.
முதியோர் தவறாக நடத்தப்படுவதற்கு எதிரான உலக விழிப்புணர்வு தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15 ஆம் தேதி சிறப்பிக்கப்படுவதையொட்டி, இச்சனிக்கிழமையன்று இந்த டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் முதியோர், தாத்தா பாட்டிகள் மற்றும் குழந்தைகளுக்காக குரல் எழுப்பி அவர்கள் மீதான தன் அக்கறையை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்