தேடுதல்

அண்டார்டிக்கா கடலில் பனிக்கட்டி அண்டார்டிக்கா கடலில் பனிக்கட்டி   (©Goinyk - stock.adobe.com)

படைப்பில் நம்பிக்கையுடன், அதனுடன் இணைந்து செயல்படுதல்

இந்த உலகில் இந்த அளவு தீமைகள் ஏன்?, அநீதிகள் ஏன்?, குழந்தைகளின் மரணங்கள் ஏன்?, நகர்களும் இயற்கையும் அழிவுக்குள்ளாக்கப்படுவது ஏன்?, அன்னை பூமி அழிக்கப்படுவது ஏன்?

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி சிறப்பிக்கப்படும் படைப்பின் மீதான அக்கறைக்கான செப நாளுக்கான தலைப்பாக, “படைப்பில் நம்பிக்கையுடன், அதனுடன் இணைந்து செயல்படுதல்” என்பது எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாளுக்கான தன் செய்தியை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் முதல் தேதி திருஅவையில் சிறப்பிக்கப்படும் படைப்பின் மீதான அக்கறைக்கான செப நாளுக்கான செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை, அந்நாளுக்கான தலைப்பு, உரோமையருக்கு புனித பவுல் எழுதிய திருமடலிலிருந்து (8:19-25), எடுக்கப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் உண்மையில் நம்பிக்கையாளர்கள் என்றால் நம் விசுவாசம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியிலிருந்து நம் சிந்தனைகளைத் தொடர்வோம் என செய்தியைத் துவக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் அறிவு எல்லைக்கும் தாண்டிய ஒன்றின் மீது நாம் நம்பிக்கைக் கொள்வதால் மட்டும் அல்ல, மாறாக, தூய ஆவியார் நம்முள் குடிகொள்வதாலும், அவர் நம்மை நன்மைத்தனத்தை நோக்கி அழைத்துச் செல்வதாலும் என்ற பதிலையும் அதில் தந்துள்ளார்.

தூய ஆவியாரே மக்களை பிறரன்பில் படைப்பாளிகளாகவும், ஆதரவு நடவடிக்கையாளர்களாகவும் ஊக்கமளித்து ஆன்மிக விடுதலையை நோக்கி நம்மை வழிநடத்துகிறார் எனக் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரின் முதல் கனி அன்பே என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடவுளின் மகிமையுடன் கூடிய வருகைக்காகக் காத்திருக்கும் கிறிஸ்தவரின் வாழ்வு, விசுவாசத்தில் திளைத்ததாக, பிறரன்பில் செயல்பாடுடையதாக, நம்பிக்கைகள் நிரம்பியதாக உள்ளது எனக்கூறும் திருத்தந்தை, இரண்டாம் வருகையின் தாமதம் குறித்து நாம் கவலைப்படவில்லை, மாறாக, மனுமகன் வரும்போது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ (லூக் 18:8) என்ற கேள்வியே முன்னணியில் நிற்கிறது என மேலும் கூறியுள்ளார்.

விசுவாசம் என்பது, நம்முள் குடிகொண்டிருக்கும் தூய ஆவியாரின் கனியாக இருக்கின்றபோதிலும், அது இயேசுவின் அன்பெனும் கட்டளைக்கு கீழ்ப்படிந்ததாக, சுதந்திரத்துடன் எடுத்து நடத்தப்படும் செயலாகும் என மேலும் தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்த நம்பிக்கைக்கு நாம் துன்புறும் மனித குலத்தின் தசையின் மீது அக்கறைச் செலுத்துவதன் வழியாக சான்று பகர முடியும் எனக் கூறும் திருத்தந்தை, இந்த சான்றானது நம் அன்பு, சகோதரத்துவம், நட்பு, அனைவருக்குமான நீதி போன்றவற்றிலிருந்து பிறக்க வேண்டும், அதுவும் மனித குலத்தை மட்டுமல்ல, இவ்வுலக படைப்பு உட்பட அகிலம் முழுமைக்குமான அக்கறையை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மீட்பு திட்டத்தில் படைப்பு இவ்வுலக சுவர்க்கம் என ஏற்றுக்கொள்ளப்பட்டு, அன்னை பூமி அனைவருக்கும் மகிழ்வின் இடமாக நோக்கப்படுகிறது, ஆனால் இன்றைய இயற்கை பல்வேறு துன்ப நிலைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்பதையும் தன் செய்தியில் திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார். 

படைப்பு முழுவதும் புதிய பிறப்பிற்கான பாதையில் வேதனையடைகிறது என தன் செய்தியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உலகில் இந்த அளவு தீமைகள் ஏன்?, அநீதிகள் ஏன்?, குழந்தைகளின் மரணங்கள் ஏன்?, நகர்களும் இயற்கையும் அழிவுக்குள்ளாக்கப்படுவது ஏன்?, அன்னை பூமி அழிக்கப்படுவது ஏன்? என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

இன்றைய உலகில் இயற்கையின் இன்றைய நிலைகள் சீரமைக்கப்பட்டு, இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என பேறுகால வேதனையுற்று கூக்குரலிடுகிறது என்ற திருத்தந்தை, இயேசு கிறிஸ்துவில் மனித குலத்தின் மீட்பு, படைப்பையும் தன்னுள் உள்ளடக்கியது என்பதில் நம் மகிழ்ச்சி அடங்கியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

இன்றைய உலகில் படைப்பும் மனித குலத்தைப்போல், அடிமைத்தனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது, ஆனால், அதுவும் ஒரு நாள் விடுதலைப்பெறும் என்ற நம்பிக்கைப் பிறந்துள்ளது எனக்கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் மனமாற்றத்திற்கும், படைப்பு சீரழிவிலிருந்து காப்பாற்றப்படவும் உழைத்து, தூய ஆவியாரின் உதவியுடன் இயேசுவின் இரண்டாம் வருகைக்காக நாம் தயாரிக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

நாம் பல்வேறு துறைகளில் முன்னேறியிருந்தாலும், அபாயகரமான மனிதர்களாகவும் மாறியுள்ளோம் என்ற அச்சத்தையும் குறிப்பிடும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒழுக்க ரீதி வரையறைகளின் அவசியம் குறித்தும் அதில் எடுத்துரைத்துள்ளார்.

மனித குலத்திற்கும் படைப்பிற்கும் இயைந்த இறையன்பின் பாடலாக நம் வாழ்வு மாற வேண்டும் என்ற ஆவலுடன் தன் செய்தியை நிறைவுச் செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 June 2024, 14:14