தேடுதல்

ஆயர் மாமன்றத்தின் கலந்துரையாடல் (கோப்புப் படம்) ஆயர் மாமன்றத்தின் கலந்துரையாடல் (கோப்புப் படம்)  (ANSA)

திருஅவையின் ஒன்றிணைந்த பயணம் என்பது ஒரு வாழும் உண்மை!

4 ஜூன் 2024 செவ்வாய்கிழமை முதல், இறையியலாளர்கள் மற்றும் கோட்பாட்டு இறையியல், திருஅவையியல், மேய்ப்புப்பணி இறையியல், திருஅவைச் சட்டம் போன்ற பல்வேறு துறைகளின் வல்லுநர்களின் குழு, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்டுள்ள தரவுகள் அனைத்தையும் பகுப்பாய்வு செய்யும்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான் 

இந்த நீண்டதொரு தெளிந்து தேர்தலின் செயல்பாட்டில் முழு திருஅவை சமூகத்தின் ஈடுபாட்டைக் கண்டு நான் பெரிதும் ஈர்க்கப்பட்டேன் என்று கூறியுள்ளார் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச்செயலர் கர்தினால் மாரியோ கிரேக்.

16-வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் சாதாரண பொதுச் சபையின் இரண்டாவது அமர்விற்கான Instrumentum laboris எனப்படும் வரைவு தொகுப்பு பணியைத் தொடங்க உலகம் முழுவதிலுமிருந்து ஏறத்தாழ இருபது இறையியலாளர்கள் உரோமை நகர் வந்துள்ள வேளை இவ்வாறு உரைத்துள்ளார் கர்தினால் கிரேக்.

முதல் அமர்வின் தொகுப்பு அறிக்கையிலிருந்து எழும் சிந்தனைகளுக்கு மேலதிகமாக, பெறப்பட்ட தரவுகள், குறிப்பிட்ட தலத்திருஅவைகள் எவ்வாறு ஒன்றிணைந்த பயணத்தைப் புரிந்துகொள்வது என்பதோடு மட்டுமல்லாமல், இந்தப் பாணியை ஏற்கனவே எவ்வாறு நடைமுறைக்குக் கொண்டுவருகின்றன என்பதற்கான உண்மையான சான்றுபகர்தல்களை சேர்க்கிறது.என்றும் விளக்கினார் கர்தினால் கிரேக்.

கடந்த டிசம்பர் மாதத்தில் உலகின் அனைத்து ஆயர்களுக்கும் அனுப்பப்பட்ட ‘அக்டோபர் 2024’ என்ற ஆவணத்தின் வழியாக, உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலகம் தலத்திருஅவைகள் மற்றும் அவற்றின் குழுக்களை ஒன்றிணைந்த பயணத்தின் கருப்பொருளின் அடிப்படையான சில அம்சங்களை ஆழப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது. அதாவது, அனுப்பப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில், 'பணியில் ஒன்றிணைந்த பயணத்தின் திருஅவையாக  இருப்பது எப்படி?' என்பதன் அடிப்படையில் ஒரு கேள்வியை எழுப்பிச் சிந்திக்க அழைப்புவிடுத்தது.

இந்த மாதங்களில், தனிப்பட்ட தலத்திருஅவைகள், ஆயர் பேரவைகள், கீழைரீதி கத்தோலிக்கத் திருஅவைகள்  மற்றும் ஆயர் பேரவைகளின் அனைத்துலக மீளிணைவுகள் (Reunions) வழியாகத் தங்கள் பங்களிப்பை அனுப்பியதன் வழி Instrumentum laboris எனப்படும் வரைவு தொகுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2024, 15:04