உங்கள் உறுதிப்பாட்டிலும் நம்பிக்கையிலும் நிலைத்திருங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நீங்கள், எப்பொழுதும் உங்கள் உறுதிப்பாடுகளில் உண்மையாக இருங்கள், மற்றவர்கள் உங்களைத் துன்புறுத்தினாலும் உங்கள் அடையாளத்தில் உண்மையாக இருங்கள், துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவ மறைசாட்சியர் போல பலம்பொருந்தியவர்களாக இருங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 20, இவ்வியாழனன்று, சிகாகோவிலுள்ள இலயோலா பல்கலைக்கழகம் மற்றும் இலத்தீன் அமெரிக்காவிற்கான பாப்பிறை அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட நேரடி ஒலிபரப்பில் "ஆசியா பசிபிக் முழுவதும் உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்புதல்" என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடியபோது இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.
சமுதாயத்திற்கு நாம் சொந்தமானவர்கள் என்பதை நீங்கள் உணரவேண்டுமெனவும், அதுவே நமக்கான பாதுகாப்பையும் நமது மனித மாண்பையும் உயர்த்துகிறது எனவும் குறிப்பிட்ட திருத்தந்தை, இன்றைய இளையயோர் மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கின்றனர் என்றும், அதிலிருந்து நீங்கள் வெளியே வர முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் மனநலம், பாகுபாடு, களங்கம் மற்றும் அடையாளம் ஆகியவற்றைக் குறித்துப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சான்று பகிரவும், அச்சான்றை வாழ்வாக்கவும் கேட்டுக்கொண்டதுடன், தங்களின் சொந்த அடையாளத்தை இழக்காது, ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்கிடவும், ஒன்றிப்புடன் வாழ்ந்திடவும் விண்ணப்பித்தார்.
ஒருவரின் மனித மாண்பை குறைத்து மதிப்பிடும் அனைத்துத் தவறான செயல்பாடுகளையும் கண்டித்த திருத்தந்தை, சில வேளைகளில் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள் என்றும், இது உண்மையல்ல என்றும் அனைவருக்கும் நினைவூட்டினார்.
பெண்களின் மகத்துவத்தை மறக்கக்கூடாது என்றும், பெண்களின் நுண்ணறிவு மற்றும் சமூகத்தை கட்டியெழுப்பும் திறனின் அடிப்படையில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்கள் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, பெண்களின் தனித்துவமான சிறப்பு பண்புகள் மற்றும் திறமைகளையும் பாராட்டினார்.
மற்றவர்களுக்கு நெருக்கத்தையும் அன்பையும் காட்டுமாறும், ஒருபோதும் அவர்களை ஒதுக்கிவைக்க வேண்டாம் என்றும் மாணவர்களுக்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை, பிலிப்பீன்சில் அதிக எச்.ஐ.வி விகிதத்தையும் பாலினத்தையும் பற்றி குறிப்பிட்ட ஒரு மாணவரின் வார்த்தைகளை நினைவு கூர்ந்த அவர், ஒதுக்கீடு இல்லாமல், அனைத்து மக்களுக்கும் சிகிச்சையளிக்கவும் உதவவும் உடல்நலப் பராமரிப்புத் (health care) தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இந்தக் கலந்துரையாடலின்போது பயனுள்ள கல்வி முறைகள் குறித்தும் விவாதித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது இதயங்கள், மனம் மற்றும் கைகளை கல்வி ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது என்றும், இப்படித்தான் நாம் இளைஞர்களுக்குக் கல்வி கற்பிக்க வேண்டும், இந்த ஆற்றலை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என்றும் உரைத்தார்.
இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களை இந்தச் சமுதாயத்தின் சொந்தமாக, ஓர் அங்கமாகக் கருதவேண்டும் என்று அறிவுறுத்திய திருத்தந்தை, இந்த எதார்த்தத்தின் ஒளியில், அவர்கள் தங்கள் நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், இறைவேண்டலுடன் தங்கள் இதயங்களை இணைக்குமாறும் அவர்களிடம் வலியுறுத்தினார்.
மேலும் அவர்கள் தங்கள் இறைநம்பிக்கையில் நிலைத்திருக்கவேண்டியதன் அவசியம் குறித்தும், தாங்கள் கொண்டுள்ள கருத்தியலில் வலுவாக இருக்கும்படியும், ஒருவருக்கொருவர் உறவுப் பாலங்களைக் கட்டியெழுப்ப வேண்டியதன் தேவை குறித்தும் இந்தக் கலந்துரையாடலின்போது விரிவாக எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்ஸ்சிஸ்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்