நான்காவது உலக தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் நாள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நமதாண்டவர் இயேசுவின் தாத்தா பாட்டியும் அன்னை மரியாவின் பெற்றோர்களுமான தூய சுவக்கீன் அன்னா இவர்களின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 ஆம் நாள் சிறப்பிக்கப்படுவதை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் நான்காம் ஞாயிற்றுக் கிழமையை உலக தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் நாளாக திருஅவையில் நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.
2021ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் முதன் முதலில் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட இந்த உலக நாளானது இவ்வாண்டு ஜூலை 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, நான்காவது ஆண்டு உலக தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் நாளாகக் கொண்டாடப்பட இருக்கின்றது.
முதிர்ந்த வயதில் பலர் சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு, தனிமையைத் தோழமையாகக் கொண்டு வாழும் நிலையை சுட்டிக்காட்டும் வகையில், “முதிர்வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்” என்ற திருப்பாடல் 71 (71:9) இல் உள்ள இறைவார்த்தைகளை, நான்காவது உலக தாத்தா பாட்டிகள் தினத்திற்கான கருப்பொருளாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்.
வயதுமுதிர்ந்த நிலையில் உள்ள ஒருவர் நட்புறவுடன் தனது வாழ்வைக் கடவுள் முன் எடுத்துரைக்கும் பகுதியாக அமைந்துள்ளது திருப்பாடல் 71 இல் உள்ள முதியோர் மன்றாட்டு. இத்திருப்பாடலில் உள்ள “முதிர்வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்” என்ற இறைவார்த்தைகள். இதனையே இவ்வாண்டிற்கான கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோரின் குணநலன்களையும், தலத்திருஅவையின் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் அவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பையும் நாம் அறிந்துகொள்வதன் வழியாக தலைமுறைகளுக்கு இடையே இணைப்பை உருவாக்குதல், தனிமையை எதிர்த்துப் போராடுதல் போன்றவற்றை அவர்களுக்கு அளிக்க முடியும்.
தொடக்க நூல் குறிப்பிடும் வார்த்தைகளான "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று" (தொ.நூல் 2:18) என்பதற்கேற்ப அவர்களை தனிமையில் விடாதிருத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் விதமாக தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் உலக நாள் கொண்டாடப்படுகின்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்