பெரிய சமூக ஆற்றலைக் கொண்டுள்ளது விளையாட்டு
மெரினா ராஜ் - வத்திக்கான்
விளையாட்டு ஒரு பெரிய சமூக ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், வெவ்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களை அமைதியான முறையில் ஒன்றிணைக்கும் திறன் கொண்டது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய மூவேளை செபஉரையின் இறுதியில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வாரம் பாரிஸில் தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற உள்ள பாராஒலிம்பிக் போட்டிகள் பற்றியும் நினைவு கூர்ந்தார்.
மேலும் விளையாட்டு என்பது நாம் உருவாக்க விரும்புகின்ற, அனைவரையும் உள்ளடக்கிய உலகத்தின் அடையாளமாக இருக்கும் என்றும், விளையாட்டு வீரர்கள் தங்களது சான்றுள்ள விளையாட்டின் வழியாக, அமைதியின் தூதுவர்களாகவும், இளைஞர்களுக்கு நல்ல முன்மாதிரியாகவும் இருப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார் திருத்தந்தை.
பண்டைய கால பாரம்பரியத்தின் படி, போர்களில் நிலவும் சண்டையை நிலைப்படுத்த உதவிய விளையாட்டு, அமைதிக்கான உண்மையான விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக இருக்கட்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோம் நகரத்தார், இத்தாலி மற்றும் பல நாடுகளில் இருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரேசிலில் உள்ள Quixadá மறைமாவட்டத்தின் Équipe Notre Dame திருப்பயணிகள், ஆப்பிரிக்காவின் ஒற்றுமைக்கான பயிற்சி திட்டங்களில் ஈடுபட்டுள்ள Ofekata Assumpta அறிவியல் நிலையத்திலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார்.
அருளாளர் Luigi Novarese அவர்களால் உருவாக்கப்பட்ட துன்புறுவோர்க்காக பணியாற்றும் சிலுவையின் அமைதிப்பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், கிறிஸ்து அரசர் மறைப்பணியாளர்கள் சபையின் இளம் துறவியர் மற்றும் புகுமுக நிலையினர், தூய அசிசியின் வழியில் நடக்கும் உரோம் இளங்குருமடத்தின் இளைஞர்கள் அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை.
அமைதிக்காக செபிப்போம் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உக்ரைன், பாலஸ்தீன், இஸ்ரயேல், மியான்மார் மற்றும் போரினால் துன்புறும் பகுதிகளில் வாழும் மக்கள் அனைவருக்காகவும் செபிக்க மறக்க வேண்டாம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி தனது மூவேளை செப. உரையினைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்