நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தை ஆறுதல்

சகோதர உறவை வலுப்படுத்துவதற்காக தற்போது தொடங்கியிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிரானது போர் செயல்முறைகள் - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

தெற்கு எத்தியோப்பியா கிராமத்தில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது உறுதியான செபத்தினை அளிப்பதாகவும், துன்புறும் அம்மக்கள் மற்றும் அம்மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருடனும் தனது ஆன்மிக நெருக்கத்தை வழங்குவதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 28 ஞாயிற்றுக்கிழமை வழங்கிய மூவேளை செபஉரையினைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தோல்வியைத்தரும் போர் நிறுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பேரழிவுகள் மற்றும் பசியினால் உலகில் உள்ள மக்கள் பலர் துன்புறும் நிலையில், ஆயுதங்களை உருவாக்கி விற்பனை செய்வதும், பெரிய மற்றும் சிறிய போர்களுக்காக இயற்கை வளங்களை அழிப்பதும் ஓர் அவச்செயல், இதனை பன்னாட்டு சமூகம் பொறுத்துக் கொள்ளக்கூடாது என்றும் கூறினார் திருத்தந்தை.

மேலும், சகோதர உறவை வலுப்படுத்துவதற்காக தற்போது தொடங்கியிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிரானது, போர் செயல்முறைகள் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், போர் எப்போதும் தோல்வி தான் தோல்வியைத்தரும் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

நான்காவது உலக தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் நாளை முன்னிட்டு அவர்களுக்கு கரவொலி எழுப்பி வாழ்த்துக் கூறிய திருத்தந்தை அவர்கள், முதிர்வயதில் என்னைக் கைவிடாதேயும் என்ற கருப்பொருளை மையப்படுத்தி இது மிகவும் சோகமான உண்மை இதனை நாம் பழக்கப்படுத்தக்கூடாது என்றும் கூறினார்.

கோடை விடுமுறை நாள்களாகிய இந்நாள்களில் பல முதியோர் தனிமையில் இருக்க நேரிடுகின்றது என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், தாத்தா பாட்டிகள் – பேரக்குழந்தைகள், இளைஞர்கள் – முதியோர்களுக்கு இடையே ஓர் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அவர்களைத் தனிமையில் விட்டுவிடக்கூடாது என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2024, 13:33