நமது எளிய அன்பினைக் கடவுளுக்குக் கொடுப்பவர்களாக இருப்போம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நாம் ஒவ்வொருவரும் நமது எளிய அன்பினைக் கடவுளுக்கு கொடுப்பவர்களாக இருக்கவேண்டும் என்றும், பாவிகளாகிய நமது அன்பு மிகச்சிறியதாக இருந்தாலும் அதனை இறைவனுக்கு நாம் வழங்க வேண்டும், அவர் அதனை ஏற்றுக்கொள்வார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 28 ஞாயிற்றுக்கிழமை நண்பல் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அப்பம் பலுகுதல் என்னும் நற்செய்தி பகுதியில் 5 அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்த நிகழ்வானது காணிக்கையாக்குதல், நன்றி கூறுதல், பகிர்தல் என்னும் இறுதி இராவுணவின்போது இயேசு செய்த மூன்று செயல்களை அடையாளப்படுத்துகின்றது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
காணிக்கையாக்குதல்
நற்செய்தியில் வரும் ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்கள் கொண்ட சிறுவன், நம்மிடம் இருக்கும் நல்லவற்றைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும், தேவைப்படுவதை விட குறைவாக அது நம்மிடம் இருந்தாலும் அதனை பிறருக்குக் கொடுக்க நாம் “ஆம்” என்ற மனநிலை உடையவர்களாக வாழ வேண்டும் என்பதை அடையாளப்படுத்துகிறான் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்செயலானது திருப்பலிக் கொண்டாட்டத்தின்போது குருவானவர் பீடத்தில் உள்ள அப்ப இரசத்தை அர்ப்பணிக்கும்போது ஒவ்வொருவரும் நம்மையே நாம் அர்ப்பணிக்க வலியுறுத்துகிறது என்றும், பல்லாயிரக் கணக்கான கூட்டத்திற்கு உணவளித்தல் என்பதற்கு முன்பு 5 அப்பம் 2 மீன் சிறிய அளவாகத் தோன்றினாலும், கடவுள் சிறியவற்றில் இருந்து ஆச்சர்யமூட்டும் அதிசயங்களைச் செய்ய வல்லவர் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
நன்றி செலுத்துதல்
இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார் என்னும் இறைவார்த்தைகள் இயேசு இறைவனுக்கு நன்றி கூறும் செயலை மனத்தாழ்ச்சி மற்றும் அன்புடன் செய்தார் என்பதை எடுத்துரைக்கின்றன என்றும், இறைவா, என்னிடம் இருப்பதெல்லாம் நீர் எனக்குக் கொடுத்த கொடை, இயேசு வழியாக நீர் எனக்குக் கொடுத்த அன்பையும், என்னால் இயன்றதையும் மட்டுமே உமக்குத் திருப்பியளித்து நன்றி செலுத்த முடியும் என்ற மனநிலை கொண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
பகிர்தல்
திருப்பலியின் திருவிருந்துப் பவனியின்போது கிறிஸ்துவின் திருஉடலையும் திருஇரத்தத்தையும் பெற்றுக்கொள்ள பலிபீடம் நோக்கி நாம் செல்லும்போது ஒன்றிணைந்து செல்கின்றோம் என்றும், இது நமக்காக தன்னையேக் கையளித்த இயேசுவின் பகிரும் குணத்தின் பலன் என்றும் கூறினார் திருத்தந்தை.
மிகவும் அழகான தருணமான இந்த திருவிருந்துப் பகுதியானது கொடுப்பவர் பெறுபவர் இருவருக்குமிடையே அன்பின் ஒவ்வொரு அடையாளத்தையும் இறைவனின் அருளாகப் பார்க்கக் கற்பிக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
இறைஅருளால் என்னிடம் இருப்பதை என் உடன் சகோதர சகோதரிகளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் தனித்துவமான ஒன்று இருப்பதாக நான் உண்மையிலேயே நம்புகிறேனா அதைக் கொடுக்கத் தயாராக இருக்கின்றேனா? அல்லது உதவ விருப்பம் இல்லாதவர் போல் இருக்கின்றேனா என்று நமக்குள் கேள்வி எழுப்ப வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், என்னிடம் தனது அன்பை வெளிப்படுத்தும் கடவுளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கின்றேனா, உரையாடல், சந்திப்பு, இணக்கம் கொண்டு பிறருடன் பகிர்ந்து வாழ்கின்றேனா என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்புவிடுத்தார்.
திருவிருந்துக் கொண்டாட்டத்தை நம்பிக்கையுடன் வாழவும் இறைஅருளால் ஒவ்வொரு நாளும் நடக்கும் அற்புதங்களை சுவைக்கவும் கண்டுகொள்ளவும் அன்னை மரியா நமக்கு உதவுவாராக என்று கூறி, கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையினைத் தொடர்ந்து தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்