தேடுதல்

உணர்வுகளைக் குணப்படுத்தும் நோயில் பூசுதல் திருஅருடையாளம்

நோயில் பூசுதல் திருஅருளடையாளம், கருணை மற்றும் நம்பிக்கையின் வெளிப்படையான அடையாளமாக மாறவேண்டும் என நாம் அனைவரும் செபிப்போம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நோயுற்றோருக்கான மேய்ப்புப்பணி அக்கறைக் குறித்து தன் ஜூலை மாத செபக்கருத்தை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயில் பூசுதல் என்னும் திருஅருடையாளம், இறக்கும்தறுவாயில் இருப்போருக்கு மட்டுமல்ல, நம் உள்ளுணர்வுகளைக் குணப்படுத்தவும் அது உதவுகிறது என தெரிவித்துள்ளார்.

நோயில் பூசுதல் என்னும் திருஅருளடையாளம் மேலும் மேலும் நம் வாழ்வில் இரக்கம் மற்றும் நம்பிக்கையின் கண்ணுக்குத் தெரிகின்ற அடையாளமாக இருக்க வேண்டும் என செபிப்பதாக தன் செய்தியில் கூறும் திருத்தந்தை,  இது இறக்கும் தறுவாயில் இருப்போருக்கு மட்டுமானதல்ல, மாறாக, இது குணப்படுத்தி, மறுசீரமைத்து உணர்வைக் குணப்படுத்தும் ஓர் அருளடையாளம் என மேலும் கூறியுள்ளார்.

நோயில் பூசுதல் திருஅருளடையாளத்தைப் பெறுவோரும் அவர்களின் அன்புக்குரியவர்களும், இறைவனின் பலத்தைப் பெறுவதுடன், இது கருணை மற்றும் நம்பிக்கையின் வெளிப்படையான அடையாளமாக மாறவேண்டும் என நாம் அனைவரும் செபிப்போம் எனவும் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நோயில் பூசுதல் அருளடையாளத்தை வழங்க அருள்பணியாளர் வரும்போது, அதனை மரணத்திற்கு வழியனுப்ப வந்ததாக எவரும் நினைக்கக் கூடாது, ஏனெனில் அத்தகைய எண்ணம் நம் நம்பிக்கையை இழப்பதைக் குறிப்பதாக மாறிவிடும் என மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.

திருஅவையின் அருளடையாளங்கள் அனைத்தும் சிறப்புக் கொடைகள் எனவும், ஆசீர்வதிக்கவும், புத்துயிரூட்டவும், இணைந்து நடைபோடவும் இயேசு பயன்படுத்திய வழிகள் அவை என மேலும் திருத்தந்தையின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 July 2024, 16:12