தேடுதல்

ஒன்றிப்பு, நல்லிணக்கம், நிதானம் கிறிஸ்தவ வாழ்க்கையின் விழுமியங்கள்

நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது சீடர்களை இருவர் இருவராக பணிக்கு அனுப்புகின்றார், அவர்கள் தங்களோடு தேவையானவற்றை மட்டும் எடுத்துச் செல்லவேண்டும் என்பது பற்றி எடுத்துரைக்கின்றார்

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஒன்றிப்பு, நல்லிணக்கம், நிதானம் ஆகியவை கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மிக முக்கியமான விழுமியங்கள் என்றும், நற்செய்தி என்பது தனியாக அறிவிக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல, மாறாக சமூகமாக ஒன்றிணைந்து வாழ்தல் என்றும் கூறினார் திருத்தந்தை.

ஜூலை 14 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லா நிலைகளிலும் உள்ள தலத்திரு அவையோடு சமூகமாக ஒன்றிணைந்து வாழ்தல், நிதானத்தைப் பாதுகாத்தல் மிக அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு தனது சீடர்களை இருவர் இருவராக பணிக்கு அனுப்புகின்றார், அவர்கள் தங்களோடு தேவையானவற்றை மட்டும் எடுத்துச் செல்லவேண்டும் என்பது பற்றி எடுத்துரைக்கின்றார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள்,  

சீடர்கள் ஒன்றிணைந்து அனுப்பப்படுகின்றார்கள் தனியாக அல்ல என்றும், தேவையானதை மட்டும் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் கூறினார்.

நிதானத்தை பாதுகாத்தல் என்பது நமது வளங்கள், திறன்கள், மற்றும் கொடைகளை பகிர்தல்,தேவைக்கு அதிகமாக வைத்திருப்பதை குறைத்தல், சுதந்திர மனநிலையுடன் இருத்தல் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், நற்செய்திப்பணி வழியாக நாம் அனைவரும் மனித மாண்புடன் வாழ்தல், மறைப்பணிக்குத் தீவிரமாகப் பங்களித்தல் போன்றவற்றைப் பெறலாம் என்றும் கூறினார்.

எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் நிதானத்துடன் இருத்தல், தங்களது தனிப்பட்ட எண்ணங்களில் சிலவற்றைக் கைவிடுதல் அவசியம் என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை அவர்கள், மோதல் - செவிசாய்த்தல் இரண்டிற்குமிடையே சாதகமாக இருக்கவேண்டிய சான்றாக அமைய வேண்டிய நமது பயணங்கள், தேவையற்ற பொருள்கள் அடங்கிய பைகளால் கடினப்படுத்தபடுகின்றவைகளாக, தடுக்கப்படுகின்றவைகளாக மாறுகின்றன எனவே அவற்றை நாம் கைவிடவேண்டும் முன்தீர்மானங்கள், பிடிவாதம் போன்றவற்றையும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடவுளின் உதவியால், இருப்பதில் நிறைவு காணவும், முன்னோக்கிச் செல்லவும், பகிர்ந்து வாழவும், நம்மால் முடிகின்றது என்றும், இதுவே மறைப்பணிக்கான அழைப்பாக இறைவார்த்தையாக, வாழ்க்கையின் உறுதியான தன்மையில் இயேசுவைப்பற்றிய செய்தியின் அழகை உள்ளடக்கியதாக இருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வழியில் வாழும் ஒரு குடும்பம் அல்லது சமூகம் அதைச் சுற்றி அன்பால் நிறைந்த ஒரு சூழலை உருவாக்குகிறது, அதில் நம்பிக்கை மற்றும் நற்செய்தியின் புதுமைக்கு தன்னை எளிதாகத் திறக்கின்றது, அமைதியான நபராக, சிறந்த நபராகத் தன்னை வெளிப்படுத்துகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

இதற்கு மாறாக, ஒவ்வொருவரும் அவரவர் வழியில் செல்வதும், ஒருவர் மற்றவருக்கு செவிசாய்க்காமலும் இருந்தால் தன்னலமும் பொறாமையும் வாழ்வில் நிலவும் என்றும், நாம் சுவாசிக்கின்ற காற்றும் கடினமானதாக, வாழ்க்கையும் கடினமானதாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நான் வாழ்கின்ற இடத்தில் நற்செய்தியைக் கொண்டு செல்லவும் அதை அறிவிப்பதற்கான சுவையை அறியவும் நான் உணர்கின்றேனா? இறைவனைச் சந்திப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சி மற்றும் ஒளியை நான் உணர்கின்றேனா என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேள்விகள் கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஒன்றிணைந்து நடக்கின்றேனா? சிந்தனைகளையும் திறன்களையும் திறந்த மனதுடனும் தாராள மனதுடனும் பிறருடன் பகிர்ந்து வாழ்கின்றேனா என்று சிந்தித்துப் பார்க்கவும் அழைப்பு விடுத்தார்.

திருத்தூதர்களின் அரசியான அன்னை மரியா நாம் ஒன்றிப்பிலும் நிதானத்திலும் உண்மையான மறைப்பணி சீடர்களாக இருக்க நமக்கு உதவுவாராக என்று கூறி மூவேளை செப உரைக்குப் பின் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2024, 12:34

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >