திருத்தந்தை : நல்ல அரசியல் தலைவர்களுக்காக செபிப்போம்

புனித திருத்தந்தை ஆறாம் பவுல் : ‘அரசியல் என்பது பிறரன்பின் மிக உயரிய வடிவங்களுள் ஒன்று, ஏனெனில் அது பொதுநலனுக்காக உழைக்கிறது’

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தங்கள் மக்களுக்குப் பணிபுரிபவர்களாக அரசியல் தலைவர்கள் செயல்படவேண்டும் என்பதற்காக இறைவேண்டல் செய்வோம் என ஆகஸ்ட் மாதத்திற்கான செபக்கருத்தில் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் மாதத்திற்கான செபக்கருத்துடன் காணொளி ஒன்றை வெளியிட்டு, அதில் புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் வார்த்தைகளான, ‘அரசியல் என்பது பிறரன்பின் மிக உயரிய வடிவங்களுள் ஒன்று, ஏனெனில் அது பொதுநலனுக்காக உழைக்கிறது’, என்பதை மேற்கோள் காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வேலை வாய்ப்புகளை இழந்தவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி, ஏழைகளின் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பொதுநலனுக்காகவும், மனிதனின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்காகவும் அரசியல் தலைவர்கள் பணியாற்ற வேண்டும் என செபிப்போம் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் செய்தி அழைப்புவிடுக்கிறது.

இன்றைய உலகில் அரசியல் என்பது ஒரு நற்பெயரைக் கொண்டிருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் திருத்தந்தை, ‘அரசியல் செய்வது’ என்ற எதிர்மறை அர்த்தத்தை விடுத்து உண்மையான அரசியல் என்பது, ஏழைகளுக்கும் வேலைவாய்ப்பற்றோருக்கும் பணிசெய்யும்போது அது மேலும் உன்னதமாகிறது என கூறியுள்ளார்.

எனவே அரசியல் தலைவர்களுக்காக நாம் செபிக்கும் அதேவேளையில், தங்கள் கடமைகளை செவ்வனே ஆற்றி, அதிகாரத்திற்காக அல்ல மாறாக மக்கள் பணிக்காக தங்களை அர்ப்பணித்து, பொது நலனுக்காக உழைக்கும் அரசியல் தலைவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம் என தன் செய்தியில் மேலும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2024, 09:23