தேடுதல்

துக்கம் அனுசரிக்கும் வியட்நாமில் அரைக்கம்பத்தில் கொடிகள் துக்கம் அனுசரிக்கும் வியட்நாமில் அரைக்கம்பத்தில் கொடிகள்  (ANSA)

வியட்நாம் நாட்டுக்கு திருத்தந்தையின் இரங்கல் தந்தி

வியட்நாமுக்கும் திருப்பீடத்திற்கும் இடையில் நல்லுறவுகள் வளர முன்னாள் அரசுத்தலைவர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் திருத்தந்தை பாராட்டு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

வியட்நாம் நாட்டின் கம்யூனிச கட்சியின் பொதுச் செயலரும் முன்னாள் அரசுத்தலைவருமான Nguyễn Phú Trọng அவர்களின் மரணத்திற்கு திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல் தந்தி அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் அனுதாபங்களை வெளியிட்டு திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள இந்த இரங்கல் தந்தியில், வியட்னாம் கம்யூனிச கட்சியின் பொதுச்செயலரும், முன்னாள் அரசுத்தலைவருமான Nguyễn Phú Trọng அவர்களின் மரணத்தால் துயருறும் அனைவரும், குறிப்பாக உறவினர்கள், ஆறுதலையும் அமைதியையும் பெற திருத்தந்தை தன் செப உறுதியை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமுக்கும் திருப்பீடத்திற்கும் இடையில் நல்லுறவுகள் வளர முன்னாள் அரசுத்தலைவர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் திருத்தந்தை தன் பாராட்டுக்களை வெளியிடுவதோடு, வியட்நாமின் துக்கம் நிறைந்த இவ்வேளையில் தற்போதைய அரசுத்தலைவருக்கும் வியட்நாம் மக்களுக்கும் தன் ஆன்மீக நெருக்கத்தை வெளியிடுவதாகவும் அத்தந்தி செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

1944ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வியட்நாமில் பிறந்த Nguyễn Phú Trọng அவர்கள் இம்மாதம் 19ஆம் தேதி தன் 80ஆம் வயதில் காலமானார். இவர் 2018 முதல் 21 வரை வியட்நாம் அரசுத்தலைவராக பதவி வகித்துள்ளதுடன், 2011 முதல் இறக்கும்வரை வியட்நாம் கம்யூனிச கட்சி பொதுச்செயலராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 July 2024, 13:12