கிறிஸ்துவின் அழகினால் நம்மை நிரப்ப வேண்டும்
மெரினா ராஜ் - வத்திக்கான்
கிறிஸ்துவின் அன்பில்லாத அனைத்தையும் விட்டு விலகி, கிறிஸ்துவின் அழகினால் நம்மை நிரப்ப வேண்டும் என்றும், எந்நிலையிலும் தனி செபத்தைக் கைவிடாது எளிமை என்னும் நற்பண்பு கொண்ட மனநிலையுடன் வாழ வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பதினாறாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் உருவான சில துறவற சபைகளைச் சார்ந்த அருள்சகோதரிகளை அவர்களின் பொதுப்பேரவையை முன்னிட்டு ஜூலை 15 திங்கள்கிழமை வத்திக்கானில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துறவற வாழ்க்கையின் அழகு மற்றும் எளிமை என்னும் இரண்டு தலைப்புக்களில் தனது கருத்துக்களை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுநன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது என்ற திருத்தூதர் பவுலின் இறைவார்த்தைக்கேற்ப, கிறிஸ்துவின் அழகினால் உலகம் முழுவதும் மறைப்பணி ஒளிவீசட்டும் என்றும் கூறினார்.
துறவற ஆண்கள் மற்றும் பெண்களின் ஆன்மிகப் பயணத்தைத் திருஅவைத் தந்தையர்கள் தெய்வீக அழகின் அன்பு, தெய்வீக நன்மையின் கதிர்வீச்சு என்று வரையறுத்திருப்பது தற்செயலானது அல்ல என்றும், திருஅவையின் வாழும் மறைபொருளின் உருவமாக துறவிகள் இருக்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
துறவற வாழ்வின் அழகு
வெவ்வேறு சூழல்கள், காலங்கள் மற்றும் இடங்களில் உருவான துறவற இல்லத்தின் கதைகள் அனைத்தும் கடவுளின் அருள் ஒளிவீசும் திருமுகத்தில் சுடர்விடுகின்றது என்றும், செபத்தில் இறைத்தந்தையுடன் இணைந்திருந்தக் கரங்கள், இரக்கம் நிறைந்த இதயம், அநீதியையும் வன்முறையையும் தட்டிக்கேட்ட அவரது கண்கள், ஒதுக்கப்பட்ட ஏழை மக்களை தேடி பல பயணங்களை மேற்கொண்ட உறுதியான கால்கள், கொண்ட இயேசுவில் அடையாளப்படுத்தப்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
சபையைத் தோற்றுவித்தவர்கள், தூய ஆவியின் தூண்டுதலால் இயேசுவின் இந்த அழகிய பண்புகளை அடையாளம் கண்டுகொண்டு, காலத்தின் தேவைக்கேற்ப துணிவு, படைப்பாற்றல், பிறரன்புப்பணி செய்யும் உறுதியான மனதுடன் செயலாற்றினார்கள் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலவீனமானவர்கள், குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள், இளைஞர்கள், போன்றோருக்கு பணியாற்றும் சமூக அர்ப்பணிப்பு கொண்டவர்களாக வாழ்ந்தனர் என்றும் எடுத்துரைத்தார்.
கிறிஸ்துவின் அழகைத்தேடி விதைக்கவும் அவர்களுக்கு உயிரூட்டிய கடவுளின் அன்பிற்கு செவிசாய்ப்பதன் வழியாகவும், அவர்கள் விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்றும், இதனால் நம்முடன் வாழும் சக மனிதர்களுக்குக் கடவுளின் முகத்தை வெளிப்படுத்துபவர்களாக நாம் இருக்கவேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துறவற வாழ்வின் எளிமை
தங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து தேவையில்லாதவற்றைக் கைவிட்டு வாழ்ந்த சபையின் முன்னோர்களைப் போல எளிமையாக வாழ வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நற்செய்தியின் ஒளி வீசும் கடவுளின் எளிமையால் தங்களை நாளுக்கு நாள் உருவாக்கிக்கொள்ள அனுமதித்தார்கள் என்றும் கூறினார்.
கடவுளின் அன்பு எளிமையானது அவரது அழகு எளிமையானது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பொறாமை என்பது ஒரு கொடிய நோய் அது நம்மை தாக்காதவாறு நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செபம்
எந்த நிலையிலும் இறைவனுடன் உரையாடும் தனிசெபத்தைக் கைவிடக்கூடாது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், நற்கருணை பிரசன்னத்தின் முன் அமர்ந்து அவருடன் உரையாட வேண்டும் என்றும், மனப்பாடம் செய்யப்பட்ட செபங்களை செபிப்பதை விட இதயத்தின் ஆழத்தில் இருந்து இறைவனுடன் உரையாடுவது சாலச்சிறந்தது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்