அனைவரும் மனித மாண்புடையவர்கள் – திருத்தந்தை பிரான்சிஸ்
மெரினா ராஜ் – வத்திக்கான்
திரியெஸ்தே புலம்பெயர்ந்தோர்க்கான திறந்த கதவுகளை உடையது, பல்வேறு மக்களை ஒன்றிணைக்கும் தொழிலைக் கொண்ட முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று என்றும், தலத்திருஅவை மற்றும் அரசுக்கிடையில் திறந்த மனம், நிலைத்த தன்மை, வரவேற்பு, அடையாளம் போன்றவற்றில் இணைந்து சவாலுடன் செயல்படுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமை திரியெஸ்தே நகரில் திருப்பயணிகளுக்கு திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலியின் நிறைவில் இறுதி ஆசீருக்கு முன்பாக வழங்கிய மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறினார்.
திருப்பலி நல்ல முறையில் நடைபெற ஒத்துழைத்த அனைவருக்கும் கரங்களைத்தட்டி தன் நன்றியினைத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு மனிதரும் மாண்புடையவர்கள், நோயாளிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் மாண்புடையவர்கள் என்று எடுத்துரைத்தார்.
துறைமுக நகரமாகிய திரியெஸ்தேவில் வாழ அடையாள அட்டைகள் சரியாக இருக்கவேண்டும் என்று கூறிய திருத்தந்தை கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் உள்ள நற்செய்தி நம் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் நம்பிக்கையையும் தருகிறது என்றும், குடிமக்களிடம் இருக்கும் அரசியலமைப்பானது ஜனநாயகத்தின் பாதைக்கு நம்பகமான திசைகாட்டியாக இருக்கின்றது என்றும் கூறினார்.
முன்னோக்கி பயமின்றி செல்லவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், மனித மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களை திறந்த, உறுதியான மனநிலையுடன் வரவேற்கின்ற அதேவேளையில் மனித மாண்பில் சமரசம் செய்யாது முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
அமைதிக்காக செபிப்போம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரினால் துன்புறும் உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரயேல், சூடான், மியான்மார் பகுதிகளில் வாழும் மக்களுக்காக செபிக்க வலியுறுத்தினார். மேலும் கிரிசா மலை அன்னையாகவும் அரசியாகவும் இருக்கும் கன்னி மரியாவிடம் இதற்கான பரிந்துரையை நாடுவோம் என்று கூறி தனது செப மூவேளை செபஉரையினை நிறைவுசெய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்