போரை விரும்பும் இதயங்கள் அமைதியையும் உரையாடலையும் விரும்பட்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
மாதத்தின் கடைசி நாளாகிய ஜூன் 30 அன்று, போரை விரும்பும் மனிதர்களின் இதயங்களைத் திருஇருதய ஆண்டவர் தொட சிறப்பாக செபிப்போம் என்றும், அவ்விதயங்கள் உரையாடல் மற்றும் அமைதியின் செயல்பாடுகளைச் செய்யவும், மனம் மாறவும் செபிப்போம் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையைத் தொடர்ந்து இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைத்து திருப்பயணிகளையும் வாழ்த்தினார்.
உரோம் நகரத்தார், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகள், போலந்தில் உள்ள மறைப்பணித்தளத்தில் உள்ள குழந்தைகள், கலிஃபோர்னியா மற்றும் ஐவரி கோஸ்ட் பகுதி திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவைப் புதல்வியர் சபை அருள்சகோதரிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், வணக்கத்திற்குரிய மரியா ஒலிவா பொனால்டோவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி பொது நிலையினருடன் அச்சகோதரிகள் மேற்கொண்ட திருயாத்திரையையும் நினைவுகூர்ந்தார். மாந்தோவாவில் இருக்கக்கூடிய கொன்சாகா மாணவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், உரோமானிய போர்வீரர்களுக்காகவும் செபிக்கக் கேட்டுக்கொண்டார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ நம்பிக்கையின் காரணமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்கள், தங்கள் வாழ்வால் திருஅவைக்கு உரமிடுகின்றனர் என்றும், இத்தகைய மக்களைக் காக்க வெள்ளைக் கையுறைகளுடன் பணிபுரியும் வீரர்களை ஆதரிப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரேல், மியான்மர் மற்றும் போரினால் பல துன்பங்களுக்கு ஆளான பல இடங்களில் வாழும் மக்களை மறந்து விடாதீர்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைவருக்கும் வாழ்த்துக் கூறி தன் மூவேளை செப உரையைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களையும் வாழ்த்துக்களையும் நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்