திருத்தந்தையுடன் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் பேராயர் சந்திப்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் மாஸ்கோ முதுபெரும் தந்தையின் இல்லத்தின் வெளியுலக சபை நடவடிக்கைகளின் தலைவர், பேராயர் Antonij அவர்கள் ஜூலை 11 வியாழனன்று மாலை திருத்தந்தையை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
முதுபெரும் தந்தையின் இல்லத்தின் வெளியுலக சபை நடவடிக்கைகளின் தலைவருக்கும் திருத்தந்தைக்கும் இடையே இடம்பெறும் நான்காவது சந்திப்பாகும் இது.
பேராயர் Antonij முதன்முதலில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார். அதே ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி காசாகிஸ்தான் நாட்டில் திருத்தந்தையின் திருத்தூதுப்பயணம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது Nur-Sultan நகரில் இரண்டாவது சந்திப்பும், அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2023ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி வத்திக்கானில் சில திருப்பீடத்துறை அதிகாரிகளை பேராயர் Antonij சந்திக்க வந்தபோது மூன்றாவது சந்திப்பும் இடம்பெற்றன.
அதேவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் பிதாப்பிதா கிரில் அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி கியூபாவின் தலைநகர் ஹவானாவுக்கு அருகே ஹோசே மார்த்தி பன்னாட்டு விமானநிலையத்தில் இரண்டு மணி நேரம் இடம்பெற்றது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்