உக்ரைன் திருப்பயண நிறைவு கொண்டாட்டங்களில் கர்தினால் பரோலின்
மெரினா ராஜ் - வத்திக்கான்
இலத்தீன் வழிபாட்டு முறை உக்ரேனியக் கத்தோலிக்கர்களின் திருப்பயண நிறைவு கொண்டாட்டங்களுக்கு தலைமையேற்று சிறப்பிக்க திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வருகின்ற ஜூலை மாதம் 21 ஆம் தேதி உக்ரைனின் பெர்டிகீவ் மரியன்னை திருத்தலத்தில் நடைபெற உள்ள கொண்டாட்டங்களுக்கு திருத்தந்தையின் பிரதிநிதியாக திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் பங்கேற்க உள்ளதாக இலத்தீன் மொழியில் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முன்னெப்போதைய நிலைமையை விட உக்ரைன் ஒரு சிறப்பு அருளுக்காக கன்னி மரியாவிடம் மன்றாட விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், போர் முடிவுக்கு வர வேண்டி திருப்பயணிகள் அனைவரும் சிறப்பாக செபிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
"உக்ரைன் மற்றும் உலகின் எல்லாப் பகுதிகளிலும் நடக்கும் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைதியின் அரசியாம் கன்னி மரியிடம் இடைவிடாமல் மன்றாட வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து, தாழ்நிலையில் இருப்போரை உயர்த்தும் இறைவனுக்கு பிரியமானவராக அன்னை மரியா திகழ்கின்றார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிற பெண்களுக்கு மத்தியில் தாழ்ச்சியில் சிறந்தவராக இருக்கும் அன்னை மரியா இந்த திருப்பயண நிறைவில் நமக்கு உதவட்டும் என்றும் கூறியுள்ள திருத்தந்தை அவர்கள், இக்கொண்டாட்டங்களின் போது திருப்பீடச்செயலருடன் இரண்டு அருள்பணியாளர்களும் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார்.
Kyiv-Zhytomir மறைமாவட்டத்தில் உள்ள குருத்துவ இல்லத்தின் பொறுப்பாளர், அருள்பணி. Ruslan Mykhalkiv மற்றும் இலத்தீன் நாட்டின் Lviv பெருநகர உயர்மறைமாவட்ட பேராயரின் செயலாளர். அருள்பணி. Andriy Lehovichஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
கார்மேல் சபை துறவியரால் வழிநடத்தப்படும் இவ்வாலயமானது 2011 ஆம் ஆண்டு தேசிய திருத்தலமாக மாற்றப்பட்டது எனினும் இத்திருத்தலத்தை நோக்கி மக்கள் திருப்பயணம் செய்யும் பழக்கமானது பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே உள்ளது. 1630 ஆம் ஆண்டு டாடர்களிடமிருந்து உக்ரைன் விடுதலை பெற்றதற்கு நன்றியாக கியேவ் யானுஷ் என்பவர் திருத்தலம் இருக்கும் தற்போதைய இடத்தில் ஒரு சிறு ஆலயத்தை பனிமய மாதாவிற்காக எழுப்பினார். இந்த பக்தி முயற்சியே நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்