தேடுதல்

தூய ரோசாலியா தூய ரோசாலியா  

நற்செயல்கள் மீதான நம்பிக்கை கொண்டவர் தூய ரோசாலியா

இறைவனைச் சரணடைவதற்காக உலக செல்வங்களைத் துறந்த தூய ரோசாலியா கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் பிறருக்கு அன்பை வழங்கவும், தங்களையே தியாகம் செய்யவும் அழைப்பு விடுக்கின்றார்

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஒரு பெண் அப்போஸ்தலராக இறைவனின் அன்பிற்காக தன்னுடைய தனிமையின் சோதனைகளை ஏற்கத் தயங்காதவர் தூய ரோசாலியா என்றும், அவரின் நான்காம் நூற்றாண்டைக் கொண்டாடும் மக்கள் அனைவரும் ஏழைகள் மீதான ஆர்வமும், நற்செயல்கள் மீதான நம்பிக்கையும் கொண்டு செபத்தில் இணைந்து இவ்வாண்டை சிறப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

இத்தாலியின் பலேர்மோ நகர் தூய ரோசாலியாவின் அருளீக்கம் கண்டுபிடிக்கப்பட்டதன் நான்காம் நூற்றாண்டு நிறைவையொட்டி ஜூலை 8 திங்கள்கிழமையன்று பலேர்மோ பெருநகர உயர்மறைமாவட்ட பேராயர் Corrado Lorefice அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனைச் சரணடைவதற்காக உலக செல்வங்களைத் துறந்த தூய ரோசாலியா கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் பிறருக்கு அன்பை வழங்கவும், தங்களையே தியாகம் செய்யவும் அழைப்பு விடுக்கின்றார் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், கிறிஸ்துவின் நற்செய்தியின் சாட்சிகளாக நம்பிக்கை மற்றும் பிறரன்புப் பணிகளில் அப்புனிதையைப் போல நாமும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நம்பிக்கையுள்ள பெண்ணான தூய ரோசாலியா போல பலேர்மோ தலத்திருஅவையிலுள்ள அனைவரும் புதிய நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருக்க வேண்டும் என்றும், மறைசாட்சிகளின் இரத்தத்தால் மீளுருவாக்கம் செய்யப்பட்ட ஒரு வாழும் சமூகமாக மீட்பராம் கிறிஸ்துவிற்கு உண்மையான மற்றும் ஒளிவிடும் சான்றுகளாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

நம்மைத் தன்னிடம் அழைக்கின்ற, இணக்கம் மற்றும் அமைதியின் பலனை நம் வாழ்க்கையில் உணர்த்துகின்ற இரக்கமுள்ள தந்தையின் அரவணைப்பில் மகிழ்வைக் கண்டுணர்ந்து வாழவும், நம்பிக்கையை இழக்காது ஊக்கமின்மைக்கு இடமளிக்காது துணிவுடன் வாழவும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 July 2024, 11:41