திருத்தந்தையின் உலகளாவிய செபக் கூட்டமைப்பு அறக்கட்டளைக்கான சட்டங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஜூலை8 திங்கள்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையின் உலகளாவிய செபக் கூட்டமைப்பு அறக்கட்டளைக்கான சட்டங்களை வரையறுத்துள்ளார்.
நான்கு தலைப்புக்களில் ஏறக்குறைய 18 இயல்களில் சட்டங்கள் பலவற்றை வரையறுத்துள்ளார் திருத்தந்தை. அவ்வகையில் முதல் தலைப்பில் பெயர், தலைமையகம், அமைப்பின் தன்மை மற்றும் நோக்கம் பற்றியும், இரண்டாவது தலைப்பில் நிர்வாகக்குழுவின் உறுப்பினர்கள், அவர்களின் பணி, கால வரையறை பற்றியும், மூன்றாவது தலைப்பில், சொத்துக்களின் நிர்வாகம் பற்றியும், நான்காவது தலைப்பில் இயக்குநர் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை பற்றியும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1844ஆம் ஆண்டு இயேசு சபை அருள்பணியாளர் François-Xavier Gautrelet என்பவரால் பிரான்சில் உருவாக்கப்பட்ட இக்கூட்டமைப்பானது தொடக்கத்தில் இயேசு சபை பயிற்சி நிலையிலுள்ள இளையோருக்காக உருவாக்கப்பட்டது. நாளடைவில் அது திருத்தந்தையின் செபக்கருத்தை உலக மக்களுக்கு எடுத்துரைக்கும் உலகளாவிய செபக் கூட்டமைப்பாக மாறியது. தற்போது பல்வேறு பகுதிகளில் உள்ள 1கோடியே30 இலட்சம் நபர்களை கிளிக் டு ப்ரே (click to pray) என்ற செயலி மற்றும் சமூகவலைதளத்திலும் வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது. 1915ஆம் ஆண்டு அதன் இளையோர் பிரிவானது நற்கருணை சிலுவைப்போர் இயக்கமாக இளையோர் நற்கருணை இயக்கமாக பிறந்தது.
கடந்த ஆண்டுகளில் திருத்தந்தை 13ஆம் சிங்கராயர், ஒன்பதாம் பத்திநாதர் ஆகியோரால் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வரும் இக்கூட்டமைப்பிற்கான சட்டங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் வரையறுத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்