தெர்னா மின்சாரத்துறை நிறுவனத்தாரை சந்தித்த திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
போர்களின் போது, நகரங்களில் முதலில் பாதிக்கப்படுவது மின்சார உள்கட்டமைப்பு என்றும் இது தற்செயல் நிகழ்வு அல்ல, ஏனெனில் இது குடும்பங்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது மற்றும் மக்களின் மன உறுதியைக் குறைக்கிறது என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 31 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் தெர்னா நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஏறக்குறைய 200 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பணி என்பது சமூக அன்பு, சகோதரத்துவ அரசு என்றும், ஆற்றலை உற்பத்தி செய்வதிலும் விநியோகிப்பதிலும் அறிவாற்றல், ஆன்மா, இதயம், அன்பை வைத்து செயலாற்ற வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பத்தாண்டுகளுக்கு முன்பு ஏழைகளின் வீடுகளிலும் ஒளியைக் கொண்டு வந்த மின்சாரத்துறையினரைப் பாராட்டிய திருத்தந்தை அவர்கள், கிராமப்புறங்களுக்கு மின்சாரத்தை எடுத்துச் சென்ற அந்த மின்கம்பங்கள் எல்லோராலும் வரவேற்கப்பட்டன என்றும் கூறினார்.
மின்சார ஒளியினால் தங்களது வாழ்க்கையில் பல மேம்படுத்துதல்களை மக்கள் கண்டார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கிராமப்புற மக்கள் மின்சார வசதி பெற்ற அன்றே இறைவனுக்கு நன்றி வழிபாடு செலுத்தினர், குழந்தைகள் நன்றாகப் படிக்க அனுமதிக்கப்பட்டனர் என்றும் கூறினார்.
ஒவ்வொரு நபரின் பொது நன்மைக்காகவும், உலக நன்மைக்காகவும் செயல்படும் அப்பணியாளர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், வீட்டில் விளக்கை ஏற்றும்போது, அந்தச் செயல் பலரின் உழைப்பாலும், அவர்களின் அறிவாற்றால், நிபுணத்துவம், மற்றும் தியாகத்தால் வந்தது என்ற நன்றியுணர்வுடன் நாம் வாழ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
நல்ல ஆற்றல் என்பது ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை மட்டுமல்ல என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், பெருகிய முறையில் சமத்துவத்தை உள்ளடக்கியதாக மாற உற்பத்தி மற்றும் நுகர்வு நமக்குத் தேவை என்றும் வலியுறுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்