தேடுதல்

பெய்ரூட் துறைமுக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருடன் திருத்தந்தை பெய்ரூட் துறைமுக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருடன் திருத்தந்தை 

உண்மையும் நீதியும் வெல்ல வேண்டும் – திருத்தந்தை

லெபனோன் மக்கள் தனியாக இல்லை, அவர்கள் தனிமையை உணர நாங்கள் அனுமதிக்க மாட்டோம், செபம் மற்றும் உறுதியான பிறரன்புப் பணிகள் வழியாக அவர்களுடன் ஒன்றித்து இருப்போம். - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

முரண்பட்ட ஆற்றல்கள், கடினமான முள் போன்ற சூழல்கள் இருந்தாலும் உண்மையும் நீதியும் வெல்ல வேண்டும் என்றும், கடவுள் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒருபோதும் ஏமாற்றமடையாது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 26 திங்கள்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் பெய்ரூட் துறைமுக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் ஏறக்குறைய 30 பேரைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

லெபனோன் மக்கள் தனியாக இல்லை, அவர்கள் தனிமையை உணர அனுமதிக்க மாட்டோம் என்றும் செபம் மற்றும் உறுதியானப் பிறரன்புப் பணிகள் வழியாக ஒற்றுமையாக இருப்போம் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், போர் எப்போதும் தோல்விதான், அது அரசியல் தோல்வி, மனிதகுலத்தின் தோல்வி என்றும் கூறினார் திருத்தந்தை.

லெபனோனின் பெய்ரூட் துறைமுகத்தில் தீ விபத்து ஏற்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும், பொறுப்பு மற்று வெளிப்படைத்தன்மையை எடுத்துரைக்கும் வார்த்தைகள் மற்றும் செயல்களை வெளிப்படுத்தும் உரிமை கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

பாலஸ்தீனம், இஸ்ரயேல், மற்றும் பிற இடங்களில் போரினால் எத்தனையோ அப்பாவி மக்கள் இறப்பதை துயரத்துடன் தான் பார்ப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இப்பூவுலகில் மனிதர்கள் உருவாக்க கடினப்படும் அமைதியானது மத்திய கிழக்கு மற்றும் லெபனோன் பகுதி மக்களுக்கு விண்ணகத்திலிருந்து கிடைக்கப்பெற செபிப்பதாகவும் கூறினார்.

“லெபனோன் ஒரு செய்தி. அச்செய்தியானது அமைதிக்கான திட்டம்” என்று ஒரு திருத்தந்தை கூறியதை மறந்துவிடக்கூடாது என்றும், லெபனோனின் பணியானது பல்வேறு சமூகங்கள் ஒன்றிணைந்து வாழும் நிலமாகவும், பொது நலனை முன்வைத்து செயல்படுவதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.

லெபனோனில் இருக்கும் கேதுரு மரத்தின் மாண்பு மற்றும் மேன்மையை போல, நம்பிக்கையின் மாண்பு, உன்னதமான எதிர்நோக்கு அம்மக்களிடம் இருப்பதைக் காண்கின்றேன் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், கேதுரு மரங்கள் நம்மை விண்ணகத்தை நோக்கிப் பார்க்க அழைப்பு விடுக்கின்றன என்றும், கடவுள் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒருபோதும் ஏமாற்றமடையாது என்றும் கூறினார் திருத்தந்தை.

2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதி லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரின் துறைமுகத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய வெடி விபத்தினால், ஏறக்குறைய 6500 பேர் காயமடைந்தனர். 207 பேர் உயிரிழந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2024, 13:16