இத்தாலியில் உள்ள ஆப்கான் குழுமதினருடன் திருத்தந்தை இத்தாலியில் உள்ள ஆப்கான் குழுமதினருடன் திருத்தந்தை   (Vatican Media)

கடவுளின் பெயரால் வன்முறை வேண்டாம்! : திருத்தந்தை பிரான்சிஸ்

மதங்கள் ஒருபோதும் போர், வெறுப்பு மனப்பான்மை, விரோதம் மற்றும் தீவிரவாதத்தை தூண்டக்கூடாது, வன்முறையையோ அல்லது இரத்தம் சிந்துவதையோ தூண்டக்கூடாது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான உங்கள் உன்னத முயற்சியில் தொடரவும், பல்வேறு மதங்களுக்கிடையில் உள்ள தவறான புரிதல்களைக் களைந்து, நம்பிக்கையான உரையாடல் மற்றும் அமைதிக்கான பாதைகளை உருவாக்க முயற்சி செய்யவும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 7, இப்புதனன்று, இத்தாலியில் உள்ள ஆப்கான் குழுமம் ஒன்றை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்பது சில வேளைகளில் பின்னடைவை சந்திக்கிறது; ஆனால், நீங்கள் உண்மையிலேயே சமூகத்திற்கு நல்லது செய்ய விரும்பினால், அமைதியை வளர்க்க விரும்பினால், இதன் சாத்தியமான பாதையை விடாமுயற்சியுடன் தொடர வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக தனது உரையின் தொடக்கத்தில், கடந்த பத்தாண்டுகளில் ஆப்கானிஸ்தான் ஒரு சிக்கலான மற்றும் துயரமான வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும், இது தொடர்ச்சியான போர்கள் மற்றும் இரத்தக் கறை படிந்த மோதல்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிய சமூகத்தின் மற்றொரு முக்கியமான பண்பும் உண்மையில் நினைவில் கொள்ளப்பட வேண்டும், அதாவது, அவர்கள் பல மக்களால் ஆனவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் கலாச்சாரம், மரபுகள் மற்றும் தனித்துவமான வாழ்க்கை முறையைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.

ஆனால் அதேவேளையில், இந்தத் தெளிவான பன்முகத்தன்மை, ஒவ்வொரு குழுவின் சிறப்பியல்புகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஓர் அடிப்படை பொதுப் பிரிவை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாக இருப்பதற்குப் பதிலாக, சில வேளைகளில் பாகுபாடு மற்றும் விலக்கலுக்கு ஒரு காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் தனது கவலையை வெளிப்படுத்தினார் அவர்.

மேலும் மதக் காரணி, அதன் இயல்பிலேயே, முரண்பாடுகளின் கடுமையை மென்மையாக்க உதவுவதோடு, அனைவருக்கும் சமமான நிலையில், பாகுபாடு இல்லாத முழு குடியுரிமை உரிமைகள் வழங்கப்படுவதற்கான ஒர் இடத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இன்னும் பல வேளைகளில், மதம் கையாளப்பட்டு, கருவியாக மாற்றப்பட்டு, எதிர் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை,  இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மதம் மோதலுக்கும் வெறுப்புக்கும் காரணமாகிறது என்றும் இது வன்முறைச் செயல்களுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

கெய்ரோவின் அல்-அசார் (Al-Azhar) மசூதியின் பெரிய தலைவரான அகமது முகமது அல்-தாயிப் (Ahmad Muhammad al-Tayyib)  அவர்களுடன் 2019-ஆம் ஆண்டு, பிப்ரவரி 4-ஆம் தேதியன்று, அபுதாபியில் கையெழுத்திட்ட உலக அமைதி மற்றும் ஒருங்கிணைந்து வாழ்வதற்கான மனித சகோதரத்துவம் குறித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மதங்கள் ஒருபோதும் போர், வெறுப்பு மனப்பான்மை, விரோதம் மற்றும் தீவிரவாதத்தை தூண்டக்கூடாது, வன்முறையையோ அல்லது இரத்தம் சிந்துவதையோ தூண்டக்கூடாது’ என்பதை விளக்கிய திருத்தந்தை, இந்த சோகமான உண்மைகள் மத போதனைகளில் இருந்து விலகியதன் விளைவுதான் என்றும் கூறினார்.

ஆகவே, வெறுப்பு, வன்முறை, தீவிரவாதம் மற்றும் குருட்டு வெறியைத் தூண்டுவதற்கு மதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும், கொலை, நாடுகடத்தல், பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறையை நியாயப்படுத்த கடவுளின் பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் நாங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2024, 12:16