தேடுதல்

நம்பிக்கையின் ஆசிரியர், அக்கறையுள்ள பணியாளர் அருளாளர் துவாகி

அருளாளர் துவாகி அவர்கள் எப்போதும் மக்களுக்கு ஆதரவாக இருந்தவர் என்றும், நம்பிக்கையின் சாட்சியாக இருந்தவர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கடந்த வெள்ளிக்கிழமை லெபனோனில் உள்ள Bkerke இல், அருளாளராக உயர்த்தப்பட்ட முதுபெரும்தந்தை அருளாளர் ஸ்தேஃபனோ துவாகி அவர்கள், தலத்திருஅவையின் கடினமான நேரங்களில் தனது அறிவாற்றலால் மாரனைட் வழிபாட்டுமுறை  தலத்திருஅவையை நன்முறையில் வழிநடத்தினார் என்றும், நம்பிக்கையின் ஆசிரியராக, அக்கறையுள்ள பணியாளராகத் திகழ்ந்தவர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு ஞாயிறு மூவேளை செப உரையினை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதனைத் தொடர்ந்து தனது செப விண்ணப்பங்களை எடுத்துரைத்த போது இவ்வாறு கூறினார்.

1670 முதல் 1704 வரை மாரனைட் தலத்திருஅவையில் நிலவிய கடினமான சூழலில் மிக விவேகமாக அறிவுக்கூர்மையுடன் தலத்திருஅவையை வழிநடத்திய அருளாளர் துவாகி அவர்கள் எப்போதும் மக்களுக்கு ஆதரவாக இருந்தவர் என்றும், நம்பிக்கையின் சாட்சியாக இருந்தவர் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

லெபனோன் மக்கள் இன்றும் துன்புறுகின்றனர், குறிப்பாக பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் நீதியும் உண்மையும் விரைவில் கிடைக்கப்பெறவேண்டும் என்று தான் விரும்புவதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள்,  புதிய அருளாளரான ஸ்தேஃபனோ துவாகி, லெபனோன் தலத்திருஅவையில் நம்பிக்கையையும் எதிர்நோக்கையும் நிலைநிறுத்தி, அன்பான லெபனோன் மக்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசுவார் என்றும் கூறினார்.  

மத்திய கிழக்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மோதலினால் வன்முறைச் சம்பவங்கள், கொடுமையான இரத்தம் சிந்தும் செயல்கள் இனிமேல் தொடராது என்று தான் நம்புவதாகவும்,  பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்காகவும் குறிப்பாக குழந்தைகளுக்காக செபிப்பதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

குறிப்பாக புனித பூமியில் உள்ள ட்ரூஸ் சமூகம், பாலஸ்தீனம், இஸ்ரயேல்,லெபனோன் மற்றும், மியான்மாரில் உள்ள போரினால் துன்புறும் மக்களை நினைவுகூர்ந்து செபிப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், காசா மற்றும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்துப் பகுதிகளிலும் உடனடி போர்நிறுத்தம் ஏற்படவும், பிணையக் கைதிகள் விடுதலை பெறவும், மனிதாபிமான உதவியுடன் மக்கள் மீட்கப்படவும், உரையாடலைத் தொடங்கவும் துணிவினை நாம் பெற வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

தாக்குதல்கள், இலக்குக் குறிவைத்து தாக்கப்படுதல்கள் மற்றும் கொலைகள் எப்போதும் அமைதிக்கான தீர்வாகாது, அவைகள் நீதியின் பாதையில் அமைதியின் பாதையில் நடப்பதற்கு ஒருபோதும் உதவாது என்றும், மாறாக இன்னும் அதிகமான வெறுப்பையும் பழிவாக்கும் எண்ணத்தையும் உருவாக்குகின்றன என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

போர் போதும், போர் எப்போதும் தோல்விதான் என்று குறிப்பிட்ட திருத்தந்தை அவர்கள், அமைதியின் கடவுளின் வார்த்தைகளைத் தடுக்காதீர்கள், அவை புனித பூமி, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் முழு உலகிற்கு ஓர் எதிர்காலமாக இருக்கட்டும் என்று கூறினார்.

நெருக்கடியான சூழ்நிலையை அனுபவித்து வரும் வெனிசுலா மக்களோடு தனது ஆன்மிக உடனிருப்பை வெளிப்படுத்திய திருத்தந்தை அவர்கள், உண்மையைக் கண்டறிதல், கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தல், வன்முறைகளைத் தவிர்த்தல், பேச்சுவார்த்தை வழியாக பிரச்சனைகளைத் தீர்த்தல், மக்களின் உண்மையான நன்மையை இதயத்தில் வைத்திருத்தல், கட்சி நலன்களைப் பேணுதல், போன்றவற்றைச் செயல்படுத்த அனைத்து தரப்பினருக்கும் இதயப்பூர்வமான வேண்டுகோளினை விடுத்தார்.

வெனிசுலா மக்களால் மிகவும் அன்பு செய்யப்பட்டு வணங்கப்படும் கொரோமோட்டோ அன்னை மரியாவின் பரிந்துரைக்கும், அனைவரையும் ஒன்றிணைக்கும் வெனிசுலா அருளாளர் ஜோஸ் கிரிகோரியோ ஹெர்னாண்டஸின் செபத்திற்கும் நாட்டை ஒப்படைப்போம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்திய மக்கள், குறிப்பாக கேரளாவில் பெய்து வரும் கனமழையால், ஏற்பட்ட நிலச்சரிவுகளால் ஏராளமான  மக்கள் உயிரிழந்ததை எடுத்துரைத்து  தனது ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்திய திருத்தந்தை அவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், பொருள்சேதம் மற்றும் உயிர் சேதத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள ஏராளமான மக்கள் அனைவருக்காகவும் சிறப்பாக செபிக்கக் கேட்டுக்கொண்டார்.

ஆகஸ்ட் 4 திருஅவை நினைவுகூரும் தூய ஜான் மரிய வியான்னி பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், பங்குத்தந்தையர்களின் பாதுகாவலராக விளங்கும் ஜான் மரிய வியான்னியைப் போல கடினமான சூழலிலும் மிகுந்த ஆர்வம், பெருந்தன்மை, கடவுளுக்காகவும் மக்களுக்காகவும்  தங்களையே அர்ப்பணித்து பணியாற்றும் உள்ளம் கொண்ட அனைத்து பங்குத்தந்தையர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்தார்.

இறுதியாக வத்திக்கான் வளாகத்தில் கூடியிருந்த உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைவரையும் வாழ்த்தி தனது மூவேளை செப உரையினைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2024, 13:42