விண்ணக வாழ்வை நோக்கி நம்மை வழிநடத்தும் அன்னை மரியா!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இறைவனை நோக்கிய நம் பயணத்தில், அன்னை கன்னி மரியா நம்மை முன்னோக்கி நடத்திச்செல்லக் கூடியவர் என்றும், நமது வாழ்வும் இயேசுவுடன் இறுதியான ஒன்றிப்பை நோக்கிய ஒரு தொடர் பயணம் என்பதை நினைவூட்டுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்
ஆகஸ்ட் 15, வியாழன் இன்று, அன்னையாம் திருஅவை தூய்மைமிகு அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவை சிறப்பிக்கும் வேளை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய சிறப்பு மூவேளை செப உரையில் இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
எலிசபெத்திற்கு உதவுவதே பெரும்பேறு
அன்னை மரியா எலிசபெத்தை சந்தித்தது ஒரு திருப்பயணம் (லூக் 1:39-56) என்றும், தான் தாயாகப்போகும் அறிவிப்பை ஆண்டவரின் தூதரிடமிருந்து பெற்றதை பெருமையாக நினைத்ததைவிட, தம் உறவினராகிய வயது முதிர்ந்த எலிசபெத்திற்கு ஓடிச்சென்று பணிவிடைப் புரிந்ததையே அவர் பெரும்பேறாகக் கருதினார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
விண்ணக வாழ்வில் மகிழ்வுறும் மரியா
அன்னை மரியாவின் இந்த முதல் பயணம், உண்மையில், அவருடைய முழு வாழ்க்கைக்கும் ஒரு உருவகமாக அமைந்துள்ளது. ஏனென்றால் அந்தத் தருணத்திலிருந்து, அன்னை மரியா எப்போதும் இயேசுவைப் பின்தொடரும் பாதையில், இறையாட்சியின் சீடராக விளங்குகிறார் என்றும், இறுதியில், அவரது மண்ணக வாழ்வுக்குரிய இந்தப் பயணமானது, அவரது விண்ணக வாழ்விக்குரிய விண்ணேற்றத்துடன் முடிவடைகிறது, அங்கு அவர் தன் மகனுடன் இணைந்து நிலைவாழ்வின் மகிழ்வை என்றென்றும் அனுபவிக்கிறார் என்றும் விளக்கினார்.
நமது வாழ்வு நோக்கமற்ற ஒரு பயணமல்ல
இயேசு நம்மை விண்ணக வாழ்வின் மகிழ்ச்சிக்காகவே படைத்தார், நாம் நிலைவாழ்வில் என்றென்றும் வாழ நம்மை அவருடன் அழைத்துச் செல்வதே அவரது கனவாக இருந்தது. எனவே, நமது வாழ்க்கை என்பது அர்த்தமற்ற மற்றும் நோக்கமற்ற பயணம் அல்ல, மாறாக, அது இறைவனுடைய அன்பின் ஒரு திட்டம் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, நாள்தோறும், அவரைச் சந்திப்பதற்கும், அவர் நமக்காகத் தயாரித்திருக்கும் முடிவில்லாத மகிழ்ச்சிக்கும் நம்மை அழைத்துச் செல்லும் ஒரு திருப்பயணம் என்று குறிப்பிட்டார்.
பிரியமானவர்களே, இந்த நம்பிக்கை என்பது, நம் வாழ்க்கையின் பயணத்திற்கு, குறிப்பாக, நாம் மிகவும் சோர்வாக இருக்கும் போது ஊட்டமளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் திருத்தந்தை.
கேள்விகள் எழுப்பிச் சிந்திப்போம்
நான் இயேசுவுடன் இருப்பதையும், மண்ணக வாழ்வுக்குரிய இந்தப் பயணத்தின் முடிவில் அவர் எனக்காகக் காத்திருக்கிறார் என்பதையும் அறிந்து, இந்த நம்பிக்கையை நான் என்னில் வளர்க்கிறேனா? நான் எனது வாழ்க்கையின் பயண ஓட்டத்தில் இருக்கிறேனா, அல்லது ஓரிடத்தில் நிலைபெற்றுவிட்டேனா? இறைவனைத் தேடுவதன் வழியாகவும், என் சகோதரர் சகோதரிகளை அன்புகூர்வதன் வழியாகவும், நான் விண்ணக வாழ்விற்காகப் படைக்கப்பட்டவன் என்பதை நினைவில் கொள்கிறேனா, அல்லது என்னைப் பற்றி மட்டும் நினைத்துக்கொண்டு மண்ணகத்திற்குரிய விடயங்களில் அடைபட்டுக் கிடக்கிறேனா? என்பன போன்ற கேள்விகளை இப்பெருவிழா நாளிலே, நமக்குள்ளே எழுப்பிச் சிந்திப்போம் என்றும் திருப்பயணிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
அன்னை மரியாவின் துணையை வேண்டுவோம்
இயேசு நம்மை அழைத்த மகிமை மற்றும் முடிவற்ற நம்பிக்கையின் விதியை நாம் மறந்துவிடாதபடி (காண். எபே. 1:18) அன்னை மரியாவைப் பார்த்து, இறைவனிடம் நமக்காகப் பரிந்து பேசும்படி அவரிடம் கேட்போம் என்று கூறி, அங்குக் கூடியிருந்த அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது சிறப்பு மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்