அன்பால் வாழ்க்கையை நிரப்புங்கள் - திருத்தந்தை

இயேசுவே உண்மையான உயிருள்ள உணவு, கடவுளோடும் பிற மனிதரோடும் நமது அன்பை மகிழ்வோடு பகிர்ந்து, நிறைவான ஒற்றுமைக்கு நம்மை வழிநடத்தவே அவர் வந்தார்

மெரினா ராஜ் - வத்திக்கான்

கடவுள் அருளால் தன்னிடம் இருக்கும் மிக்குறைவானவற்றையும் பிறருடன் ஒருவர் பகிரும்போது, எல்லாரும் ஏதாவது பெற்றுக்கொள்ள முடியும் என்றும்,  நமது வாழ்க்கைப் பயணத்தில் நாம் முன்னேறிச் செல்ல உதவும் பொருள்கள் முக்கியமானவை என்றாலும் அவை ஒருபோதும் வாழ்க்கையை முழுவதும் நிரப்புவதில்லை என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 4 பொதுக்காலத்தின் 18ஆம் ஞாயிற்றுக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு, ஐந்து அப்பம் இரண்டு மீன்களை ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்தளித்த நிகழ்வை எடுத்துரைத்து விளக்கிய திருத்தந்தை அவர்கள், அப்பம் பலுகுதல் வழியாக இயேசு இறைத்தந்தையின் எல்லையற்ற அன்பினை வெளிப்படுத்தினார் என்றும், சிறுவன் பெருந்தன்மை, தாராளமனம், துணிவு கொண்டவனாக, தன்னிடத்தில் இருந்த  மிகக்குறைவான பொருளைக் கொடுத்து, எல்லாரும் எல்லாமும் பெறக் காரணமாக அமைந்தான் என்றும் கூறினார்.

அப்பம் பகிர்ந்தளித்து தங்கள் பசியை நீக்கிய இயேசுவின் செயலை ஏதோ மாய மந்திரம் போல மக்கள் கருதினார்கள் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இயேசுவை அதே நோக்கத்திற்காகவே அம்மக்கள் தேடினார்கள் என்றும், தன்னிடம் இருப்பதைப் பிறருடன் பகிர வேண்டும் என்பதையே இயேசு தங்களுக்குக் கற்பித்தார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அப்போதைக்கு நிறைவளிக்கும் அப்பம் மற்றும் மீனில் மட்டுமே மக்களின் கவனம் இருந்தது, மாறாக, விண்ணகத்தந்தையின் அன்பைப் புரிந்துகொள்ள பயன்படுத்தப்பட்ட ஒரு கருவி அந்நிகழ்வு என்பதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இயேசுவே உண்மையான உயிருள்ள உணவு, கடவுளோடும் பிற மனிதரோடும் நமது அன்பை மகிழ்வோடு பகிர்ந்து, நிறைவான ஒற்றுமைக்கு நம்மை வழிநடத்தவே அவர் வந்தார் என்றும் கூறினார்.

நமது வாழ்க்கைக்கு பொருள்கள் உதவுகின்றன, அவை நமது வாழ்க்கையை நிரப்புவதில்லை, மாறாக அன்பால் மட்டுமே நமது வாழ்க்கையை நிரப்ப முடியும் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், பிறரன்புச் செயல்கள், தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாது மாறாக, அனைத்தையும் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் என்றும் எடுத்துரைத்தார்.

தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எதையாவது விட்டுசெல்லவேண்டும் என்று ஆயுளின் கடைசிவரை உழைத்து பொருள் சேர்த்து வைக்கும் பெற்றோர்களின் நிலையை குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள்,  பிள்ளைகள் தங்களது பெற்றோர்களுக்கு நன்றியுள்ளவர்களாகவும் ஒருவருக்கொருவர் சகோதர உறவுடன் வாழ்பவர்களாகவும் இருப்பது மிகவும் அருமையானது என்றும் கூறினார்.

இதற்கு மாறாக பொருள் செல்வத்திற்காக தங்களுடைய உடன் சகோதர சகோதரிகளுடன் சண்டையிடுவது, பல ஆண்டுகள் பேசாமல் இருப்பது மிக வருத்தமானது என்றும், பெற்றொர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச்செல்ல வேண்டியது கடவுள் நம்மீது காட்டும் அன்பு மட்டுமே என்றும் கூறினார் திருத்தந்தை.

இவ்வுலகப் பொருள்களுடனான எனது பற்று எப்படி இருக்கின்றது? நான் அவற்றிற்கு அடிமை போல இருக்கின்றேனா? அல்லது சுதந்திர மனதுடன் அவற்றைப் பயன்படுத்துகின்றேனா? அன்பைப் பெறுவதற்கும் கொடுப்பதற்கும் பொருள்கள் எனக்கு உதவுகின்றனவா? நான் பெற்றுக்கொண்ட கொடைகளுக்காக இறைவனுக்கும் பிறருக்கும் எனது நன்றியினைக் கூற முயலுகின்றேனா? உடன் சகோதர சகோதரிகளுடன் நான் பெற்றுக்கொண்ட கொடைகளைப் பகிர்கின்றேனா? என்று சிந்தித்துப் பார்க்க அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தனது வாழ்வை முழுவதும் இயேசுவிற்காக கையளித்த அன்னை மரியா, அன்பின் கருவிகளாக நமது ஒவ்வொரு செயலும் மாற நமக்குக் கற்பிப்பாராக என்று கூறி மூவேளை செப உரைக்குப் பின் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை திருப்பயணிகளுக்கு வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2024, 13:39

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >