தேடுதல்

நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோருடன் நற்செய்தி அறிவிப்பு பேராயத்தின் நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோருடன்  (Vatican Media)

நற்செய்தி அறிவிப்புக்கு உதவும் அறிவுசார் நுட்பங்களை உருவாக்க....

உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் தனித்துவம் என்பது எப்போதும் அதன் மறைப்பணியோடு, அதாவது உருவாக்குதல், கற்பித்தல், உயிர்துடிப்புடன் செயல்படுதல் என்பவைகளோடு இணைந்துள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகம் முழுவதும் உள்ள மறைப்பணிதள மறைமாவட்டங்களுக்கு என குருமட மாணவர்களுக்கும் அருள்பணியார்களுக்கும் பயிற்சியளித்து உருவாக்கிவரும் உரோம் நகரின் உர்பான் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் வருங்காலப் பணிகள் குறித்த தனிச்சிறப்பு ஆண்டுநிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரைவழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் உர்பான் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் வருங்கால மறைப்பணிகள் குறித்து ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் நற்செய்தி அறிவுப்புக்கான திருப்பீடத்துறையின் கூட்டத்தில் பங்குபெறுவோரை 30ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  உர்பான் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் வருங்காலம் குறித்து விவாதிக்க உலகின் பல்வேறு நாடுகளின் ஆயர்கள் மற்றும் திருஅவைத் தலைவர்கள் உரோம் நகரில் கூடி விவாதிக்க வந்துள்ளது குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தின் தனித்துவம் என்பது எப்போதும் அதன் மறைப்பணியோடு, அதாவது உருவாக்குதல், கற்பித்தல், ஆய்வு செய்தல் மற்றும் உயிர்துடிப்புடன் செயல்படுதல் என்பவைகளோடு இணைந்துள்ளது என்ற திருத்தந்தை, உலக மக்கள் அனைவருக்கும் நற்செய்தி அறிவித்தலை இது தன் குறிக்கோளாகக் கொண்டுள்ளது எனவும் கூறினார்.

உர்பான் கல்லூரியாக துவக்கப்பட்டு நானூறு ஆண்டுகளை கடந்து வந்துள்ள இந்த உர்பான் பல்கலைக்கழகம், அறிவையும் திறமைகளையும் அனுபவங்களையும் பகிரும் இடமாக மட்டும் இல்லாமல், ஒழுக்கரீதி மற்றும் மத பன்முகத்தன்மையுடைய இவ்வுலகில் நற்செய்தியை அறிவிப்பதற்கு உதவும்வகையிலான அறிவுசார் நுட்பங்களை வழங்க உதவுவதாகச் செயல்படவேண்டும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

நாம் ஒரு கிறிஸ்தவ சமூகத்தில் வாழவில்லை,  மாறாக பன்முகத் தன்மையுடைய இன்றைய சமூகத்தில் ஒரு கிறிஸ்தவராக வாழ அழைப்புப் பெற்றுள்ளோம் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை,  திருஅவை கட்டமைப்புக்களின் உயிர் துடிப்பு, தலத்திருஅவைகளின் முக்கியத்துவம், தேவ அழைத்தல்கள், பல்வேறு பகுதிகளின் மக்கள் தொகை விகிதங்கள் போன்றவை குறித்தும் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2024, 17:21