தேடுதல்

கப்புச்சின் துறவு சபையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் கப்புச்சின் துறவு சபையினருடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

அன்பு, மன்னிப்பு, நல்லிணக்கம், நம்பிக்கை மனிதர் தூய பிரான்சிஸ்

தூய பிரான்சிஸ் போல அமைதியின் மனிதராக மன்னிப்பை ஏற்பவராக, அன்பை வழங்குபவராக, நல்லிணக்கத்தை ஊக்குவிப்பவராக இருக்க வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்  

உருவாக்கம் இல்லாமல் எதிர்காலம் இல்லை என்றும், தூய பிரான்சிஸ் போல அமைதியின் மனிதராக அன்பு, மன்னிப்பு நல்லிணக்கம் கொண்டு வாழவேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 31 சனிக்கிழமை வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் கப்புச்சின் துறவு சபையின் 86ஆவது பொதுப்பேரவையை முன்னிட்டு அதன் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 175 பேரை சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரான்சிஸ்கன் ஆன்மிகத்தின் மூன்று பரிமாணங்களான உடன்பிறந்த உணர்வு, தயார்நிலை, அமைதிக்கான அர்ப்பணம் ஆகிய மூன்று தலைப்புக்களில் தனது கருத்துக்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொதுப்பேரவையானது தூய ஆவியின் மொழியில் ஒருவருக்கொருவர் பேசவும் செவிசாய்க்கவும், உலகம் முழுவதுமுள்ள பிரான்சிஸ்கு சபைத்துறவிகளில் கடவுளின் அற்புதமான செயல் நடைபெறவும் வாய்ப்பாக உள்ளது என்றும் கூறினார்.

உடன்பிறந்த உணர்வு

கடவுளின் திட்டத்தில், யாரும் தன்னை ஒரு தீவாகக் கருத முடியாது என்றும், ஒவ்வொருவரும் அன்பில் வளர, தன்னலத்திலிருந்து வெளியேற, உருவாக்கம் பெற, மற்றவர்களுடன் நல்உறவை வளர்த்துக்கொள்ள ஒத்துழைப்பின் மர்மமாக பொதுப்பேரவை செயல்படுகின்றது என்றும் கூறினார்.

தனது தனித்துவத்தை வளர்த்தெடுக்க நினைக்கும் கப்பூச்சியன் துறவி அதனை தனது உடன்சகோதரருக்கானக் கொடையாக மாற்றாவிட்டால் அவர் ஒரு கப்புச்சின் துறவியாக இன்னும் வாழத் தொடங்கவில்லை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், "மனித வளங்கள் மற்றும் அதன் செயல்திறனை மேம்படுத்தவோ அல்லது அதன் கட்டமைப்புகளைப் பாதுகாக்கவோ நீங்கள் ஒன்றுகூடவில்லை. மாறாக நம்பிக்கையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரர்களாக, இறைத்தந்தையின் தொண்டுப்பணிகளில் உங்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக ஒன்று கூடி இருக்கின்றீர்கள் என்றும் எடுத்துரைத்தார்.

உருவாக்கம் இல்லாமல் எதிர்காலம் இல்லை என்றும், வாழ்வின் மையத்தில் உடன்பிறந்த உணர்வு இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், எளியமக்களின் நன்மை, மீட்பு ஆகியவற்றில் அவர்களோடு இணைந்து வாழ இறைவன் நம்மை அனுப்பியுள்ளார்  என்றும் கூறினார்.

தயார்நிலை

வேறு யாரும் செல்ல விரும்பாத இடத்திற்குச் சென்று பணியாற்ற கப்பூச்சியன் துறவறத்தார் தயார் நிலையில் இருப்பதற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், அவர்களின் திறந்த மனம், வாழ்க்கையில் மிக முக்கியமான விடயம் பிறரன்புப் பணி என்பதற்குச் சான்று பகர்கின்றது என்றும் கூறினார்.

மோதல்கள் மற்றும் வன்முறைகள் நிலவுகின்ற இக்காலங்களில், உதவி, மரியாதை, பகிர்வு ஆகியவற்றில் அலட்சியம் மற்றும் சுயநலம் மேலோங்கி இருப்பதாகத் தோன்றும் இக்காலத்தில் துறவிகளின் சாட்சிய வாழ்வு பாராட்டத்தக்கது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், எளியவர்களாக, முழுமன விடுதலை பெற்றவர்களாக,  இறைவன் அழைக்கும் இடத்திற்கு செல்ல தயாராக, பணியாற்ற திறந்த கைகள் உடையவர்களாக இருப்பதே துறவியர் ஏற்றுக்கொண்ட ஏழ்மை வார்த்தைப்பாடு என்றும் கூறினார்.

அமைதிக்கான அர்ப்பணிப்பு.

மக்கள் மத்தியில் அமைதியை எடுத்துச்செல்பவர்களாக இருங்கள், மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட, சந்திப்புகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல், மோதல்களைத் தீர்ப்பதற்கு உரையாடலை மேற்கொள்ளுதல், மக்களை ஒன்றிணைத்தல், நல்லிணக்கக் கலாச்சாரத்தை மேம்படுத்துதல் போன்றவற்றில் இன்னும் அதிக கவனம் செலுத்துங்கள் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.

கிறிஸ்துவில், அனைவருக்கும் நெருக்கமாக இருக்க வேண்டும், யாரையும் விலக்காமல், குறிப்பாக ஏழைகள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் அவநம்பிக்கையானவர்கள் அனைவருக்கும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தூய பிரான்சிஸ் போல அமைதியின் மனிதராக  மன்னிப்பை ஏற்பவராக, அன்பை வழங்குபவராக, நல்லிணக்கத்தை ஊக்குவிப்பவராக இருக்க வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2024, 13:43